கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார்.

கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன், த.தே.பொ.க. சார்பில் க. அருண்பாரதி, தமிழர் குடியரசு முன்னணி சார்பில் ஜெயப்பிரகாசன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் சதீஷ், சேவ் தமிழ் இயக்க சார்பில் பரிமளா, மே 17 இயக்க சார்பில் திருமுருகன், காந்தி ஆகியோர் உரையாற்றினர். தோழர் அருண்சோரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். புதுவை தி.வி.க. சார்பில் தோழர் அய்யப்பன் தலைமையில் தனிப் பேருந்தில் தோழர்கள் வந்திருந்தனர்.

தொல். திருமாவளவன் உரையாற்றுகையில், “ஒரு கட்சியின் அல்லது இயக்கத்தின் தொண்டர்கள் நடத்திய போராட்டங்களுக்காக அக்கட்சியின் தலைவர்களை பொறுப்பாக்கி கைது செய்வது என்றால் தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையில்தான் அடைக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் என்ற அடக்குமுறை சட்டங்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி கூட்டணிகள் மீது மட்டுமல்ல, ஆளும் கட்சி கூட்டணிகள் மீதும் பாய்கிறது. நான் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது ஈழத் தமிழர்களுக்காக மறைமலை நகரில் உண்ணா விரதம் இருந்தபோது, ஏராளமான விடுதலை சிறுத்தைகள் மீது தி.மு.க. ஆட்சிதான் குண்டர் சட்டங்களை போட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை உருவாக்கிய பழ. நெடுமாறன் போன்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை எதிர்க்காதவர்கள், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு கடுமையாக பாடுபட்டவர்கள்கூட இந்த முற்றத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றவர்கள்தான், அவர்கள் மீதே வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்” என்றார் திருமாவளவன்.

தோழர் தியாகு, தனது உரையில், “இந்தியா சுதந்திரம் பெற்றபோது ரவுலட் போன்ற அடக்குமுறை சட்டங்களை அமுல்படுத்த மாட்டோம் என்று கூறியவர்தான் நேரு. ஆனால், அவர் ஆட்சியிலும் அடக்குமுறை சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தார்கள். இந்திரா காந்தி அவசர நிலை காலத்தில் உருவாக்கிய 42 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் போதுதான் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘இந்திய தேசியம்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். உள்நாட்டு அவசர நிலையைப் பிரகடனம் செய்த இந்திரா, அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். மொரார்ஜி தலைமையில் ஜனதா பதவிக்கு வந்தபோது உள்நாட்டு அவசர நிலையை எவரும் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத அளவுக்கு சட்டத்தில் திருத்தம் செய்தது. ஆனால், இப்போதுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது அந்த ஆட்சியில்தான்.

தோழர் கொளத்தூர் மணிக்கு சிறை ஒன்றும் புதிது அல்ல. தடா சட்டத்தின் கீழும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழும் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அறிவுரைக் குழுமத்தின் முன் நிறுத்தப்பட்டபோது அங்கிருந்து மூத்த நீதிபதிகளிடம், உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனாலும் நீங்கள், என்னை வழக்கிலிருந்து விடுவிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மூத்த நீதிபதிகளாகிய நீங்கள் உறுதி செய்யும் இந்தத் தண்டனையை உயர்நீதிமன்றத்தில் இளம் நீதிபதிகளால் ரத்து செய்யப்பட்டு, உங்களின் தீர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு விடுகிறதே என்ற வருத்தம்தான் எனக்கு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தபோது இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்ததால், கவனம் திசை திரும்பிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு மத்திய அரசுக்கு எதிராகவே எங்கள் போராட்டம் தொடரும் என்று நாங்கள் அறிவித்தோம். உடனே சில ‘அறிவு ஜீவிகள்’ தமிழக அரசை எதிர்க்க பயப்படுவதாக எங்களை கேலி செய்தார்கள். காமன்வெல்த் பிரச்சினை முடிந்த பிறகு இப்போது தமிழக அரசை எதிர்த்து நாங்கள் கண்டனக் குரல் கொடுக்கிறோம். அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்ப்பது திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கையாகும். கொள்கை எதிரிகளைக்கூட அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஒரு போதும் நாங்கள் வலியுறுத்தியது இல்லை. தமிழ்நாட்டில் ஜாதிவெறிக்கு கூட்டணி அமைத்த மருத்துவர் இராமதாசின் ஜாதிக் கூட்டணியை நேரடியாக எதிர்த்து களமிறங்கியவர்கள் நாங்கள். அப்போதுகூட பா.ம.க.வினர் மீது குண்டர் சட்டங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

பொதுவாக அடக்குமுறைச் சட்டங்கள் தமிழின உணர்வாளர்கள், இஸ்லாமியர்கள், தலித் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வருகிறன்றன. பார்ப்பன ஊடகங்கள் உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் போராட்டங்களை தேச விரோத நடவடிக்கைகளாகவே சித்தரிக்க முற்படுகின்றன. பாட்னாவில் மோடியின் கூட்டத்தில் குண்டு வீச்சு நடந்தவுடன் அன்றைக்கே இது இஸ்லாமிய பயங்கரவாதிகள் சதி என்று ஊகித்து ஊடகங்கள் விவாதங்களை நடத்தத் தொடங்கிவிட்டன. இப்போது பா.ஜ.க. கட்சியைச் சார்ந்தவர்களும் ‘இந்துக்கள்’ நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்த உண்மைகள் ஊடகங்களால் இருட்டடிக்கப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தும் இனத்துக்கான விடுதலை – உரிமைகள் மறுக்கப்பட்ட இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய விடுதலைதான். பார்ப்பனிய ஜாதியத்துக்கு எதிரான மக்கள் விடுதலையே பெரியார் வலியுறுத்திய இன விடுதலைப் போராட்டம்.

முள்ளி வாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதையும் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அங்கே பெரியார் படம் இடம் பெறவில்லை என்பதை நாங்கள் கண்டித்தாலும், அதை விவாதிக்க வேறு தளம் உண்டு. அதைவிட முள்ளி வாய்க்கால் முற்றம் என்ற மாபெரும் நினைவுச் சின்னத்தை மதிக்கிறோம். அதை அவமதிக்கும் தமிழக அரசின் அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மற்றும் தோழர்களின் கைதுக்கு எதிராகவும் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க முன்வந்த தோழமை சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அரசு அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.

பெரியார் முழக்கம் 28112013 இதழ்

You may also like...