தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த

20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்!

மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’ என்பதை தமிழர்கள் மறந்துவிடவில்லை.

இப்போதும்கூட மன்மோகன் சிங் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கோ, போர்க் குற்றத்துக்கோ எதிராக, காமன்வெல்த் மாநாட்டுப் பயணத்தைத் தவிர்க்க வில்லை. இயலாமையின் காரணமாக வரமுடியவில்லை என்று தான் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார், எங்கே ராஜபக்சே மனம் புண்பட்டுவிடுமோ என்று!

‘பல்வேறு காரணங்களால்’ பங்கேற்க இயலவில்லை’ என்று தொலைபேசி வழியாக ராஜபக்சேவை சமாதானப் படுத்த முயன்றிருக்கிறார். பல்வேறு காரணங்கள் எவை என்பதை அவர் கூறவில்லை. இதைவிட கொடுமை வெளியுறவு அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து தான். இலங்கையுடன் இந்தியா நட்புறவு கொண் டிருந்ததால் தான் 300 தமிழக மீனவர்களை இலங்கை சிறையி லிருந்து விடுவிக்க முடிந்ததாம். இது என்ன வாதம்? இலங்கை கப்பல்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதையும் சிறை பிடிப்பதையும் கண்டிக்க வேண்டிய இந்திய வெளி விவகாரத் துறை, இலங்கையின் கருணை யாலும் நட்புறவாலும்தான் மீட்க முடிந்தது என்று வாய்கூசாமல் கூறுவது அவமானம் அல்லவா? தமிழகத்தின் எதிர்ப்புகளால் இலங்கை அரசு மீனவர் பிரச்சினைப் பற்றிப் பேசினால் அனுதாபத்தோடு காது கொடுக்கவே மறுக்கிறதாம். பல்வேறு மட்டங்களில் இந்தியா, இலங்கை அரசிடம் மிகவும் தாழ்ந்து நிற்க வேண்டியிருக்கிறதாம். இப்படி எல்லாம் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள் வெளிப்படையாகவே பேட்டி தருகிறார்கள். இந்தியாவுக் கென்று ஒரு ‘இறையாண்மை’ இருப்பதை ஒதுக்கிவிட்டு இலங்கையிடம் மன்றாடும் அணுகுமுறை – நாட்டுக்கு பெருமை சேர்க்குமா? ‘தமிழின வெறுப்பு’ தானே இப்படி எல்லாம் அவர்களை பேச வைக்கிறது?

மன்மோகன் சிங், மாநாட்டுக்குப் போயிருந்தால் யாழ்ப்பாணம் போய் தமிழர்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்திருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமே என்று எழுதுகிறது ‘இந்து’. இப்போதும்கூட வெளி விவகாரத் துறை  அமைச்சர் தமிழர் பகுதிக்குப் போகலாமே! யார் தடுத்தார்கள்? வடக்கு மாகாண முதல்வர் விடுத்த அழைப்பு அப்படியே இருக்கிறதே! ஆ°திரேலியாவைச் சார்ந்த ‘கிரீன்° பார்ட்டி’ கட்சியின் செனட் உறுப்பினரும் நியுசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை நேரில் கண்டு கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்திக்க நவம்பர்

10 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வந்தபோது, இலங்கை அரசு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தடை போட்டு விட்டது. குடியுரிமைத் துறை அதிகாரிகள் அவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளார்கள். காமன்வெல்த் மாநாடு தொடங்கிய நாளிலேயே இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் இந்தக் கூத்து, அந்நாட்டின் ‘மனித உரிமை’, ‘கருத்துரிமை’யின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டிக் யிருக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் தலைவரான பிரிட்டிஷ் இளவரசியே இந்த மாநாட்டுக்கு வரவில்லை. கனடா நாட்டின் பிரதமரோ இலங்கையின் மனித உரிமை மீறலை வெளிப்படையாகக் கண்டித்து தனது புறக்கணிப்பை முதுகெலும்போடு பதிவு செய்திருக்கிறார். ஆனால், வரஇயலாமல் போய்விட்டதை வருத்தத்துடன் கடிதம் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் ராஜபக்சே விடம் கருணை மனுப் போட்டுவிட்டு ஒதுங்கியிருக்கிறார், இந்தியப் பிரதமர்!

தமிழர்களின் உணர்வுக்கு மிகப் பெரும் அவமானம்!

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

 

You may also like...