கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.

அதன்படி அவர்கள் சொன்னது, – அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈ°வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது.

அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈ°வரி அடித்து அவரின் கை வீங்கிப் போனது. அதைக் கண்ட அவரின் பெற்றோர் கேட்ட போதுதான் அந்த மாணவி நடந்ததைச் சொல்லியுள்ளார்.

பெற்றோரும், தீண்டாமைக்குட்பட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும், மக்கள் விடுதலை முன்னணியும் சென்ற 20.11.2013 அன்று அந்தப் பள்ளி ஆசிரியரிடம் கேட்கச் சென்ற போது, சம்பவ இடத்திலேயே இவர்கள் முன்னிலையிலேயே, அந்த ஆசிரியருக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அலைபேசியில் அந்த ஆசிரியரிடம், ‘என்னம்மா பசங்களை கக்கூ° கழுவச் சொல்றீங்களாமே என்று கேட்டுள்ளார்.

அந்த ஆசிரியை, உங்க பசங்களையெல்லாம் (பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்) அப்படி சொல்லவில்லை, மாதாரிப் பசங்களைத்தான் சொன்னேன் என்று அவர்கள் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த உதவிக் கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு முற்றுகையை கைவிட்டார்கள்.

ஏற்கனவே கிணத்துக்கடவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை மற்றும் முடித்திருக்கும் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு முடி வெட்டாமை ஆகியவற்றைக் கண்டித்து தடையை மீறி கிணத்துக்கடவில் கண்டன ஆர்ப்பாட்டமும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமும் திராவிடர் விடுதலைக் கழகத்தால் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டு வழக்கு நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : நிர்மல்குமார்

பெரியார் முழக்கம் இதழ் 05122013

You may also like...