பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம் படத்திறப்பு

‘சமத்துவ சமூகம் அமைப்பதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு’ என வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் என்று படத்திறப்பில் தூத்துக்குடி பால்பிரபாகரன் குறிப்பிட்டார்.
பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் அய்யா அவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி பேராவூரணி ‘மெய்ச்சுடர்’ இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ‘மெய்ச்சுடர்’ இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ ஆயர் ஜேம்°, தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், படத்தினை திராவிடர் விடுதலைக்கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பட்டுக்கோட்டை வளவன் அய்யா அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டவராகத்தான் இருந்தார். அந்த திருக்குறள் போதித்த சமத்துவ சமூகம் அமைவதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் தன் வாழ்நாள் முழுவதும் பெரியாரியலை தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் சுற்றி சுற்றி வந்து மக்களிடையே பரப்புரை செய்தார். அவர் தன்னை ஒரு அமைப்புக்குள் சுருக்கிக்கொள்ளாமல் அனைத்து பெரியார் இயக்கங்களிலும், தன் உறவு வட்டத்தை பெருக்கிக் கொண் டார். பெரியாரியலை திராவிடர் விடுதலைக் கழகம் மிகச் சரியாக மக்கள் மத்தியில் எடுத்து செல்வதை புரிந்து கொண்ட சதாசிவம் அய்யா, திராவிடர் விடுதலைக்கழக தோழர்களிடமே தனது இறுதி நாட்களை அர்பணித்துக் கொண்டார்.
அவருடைய பேச்சுக்கள் வேண்டுமென்றால் இன்றைக்கு நின்று போயிருக்க லாம், ஆனால் சமூகத்திற்கு அவர் சொல்ல வேண்டிய கருத்துக்கள் அவரால் தயாரிக்கப்பட்ட அவரால் அடையாளம் காட்டப்பட்ட பல்வேறு கருஞ்சட்டை தோழர்களால் தமிழகம் முழுவதும் என்றைக்கும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர் இன்றைக்கு படமாகி இன்றைய இளைஞர்களுக்கு பாடமாகி யிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் கோவிந்தன், சேது ஒன்றிய செயலாளர் ஜெயச் சந்திரன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மாவட்ட துணை செயலாளர் சம்பத், சண்முகம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் ஆசிரியர் செல்வம், எழுத்தாளர் துரைகுணா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். துவக்கத்தில் தஞ்சை பெரியார் சித்தன் அய்யா சதாசிவத்தை பற்றி பாடல்களை பாடினார்.

பெரியார் முழக்கம் 18022016 இதழ்

You may also like...