நவீன துரோணாச்சாரிகளால் காவு வாங்கப்பட்டவர் ரோகித் வெமுலா பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி பால்பிரபாகரன் பேச்சு
அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டும், நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்டச்சேரி தலித் முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டும், நீதிமன்றத்தை அவமதித்த நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும். விழுப்புரம் தனியார் கல்லூரியில் மரணமடைந்த மூன்று மாணவிகளுக்கு நீதி கேட்டும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் பிப்ரவரி 2ம் தேதி மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் பாரி, திராவிடர் விடுதலைக் கழக பாடகர் பள்ளத்தூர் நாவலரசன், தமிழக மக்கள் புரட்சிக்கழக மாவட்ட செயலாளர் வி.சி.முருகையன், மெய்சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழக ஒன்றிய செயலாளர் வீரக்குடி ராஜா, பொதுச் செயலாளர் ஆர்.நீலகண்டன், மனிதநேய மக்கள் கட்சி அப்துல்சலாம், நகரச் செயலாளர் அப்துல்லா, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில், “வெமுலா தாழ்த்தப் பட்டவர் என்பதற்காக மட்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படவில்லை. அவர் தலித் என்கிற அடிப்படையில் அமைதியாக இருந்திருந்தால் மரணமடைந்திருக்க மாட்டார். மாறாக அம்பேத்கர், பூலே, பெரியார் கொள்கைகளை நடைமுறைபடுத்துக்கின்ற வகையில் சமூக அக்கறையோடு நாட்டில் இத்துத்துவவாதிகளால் நடைபெறும் சாதிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அவர் போராடியதால்தான் தற்கொலைக்கு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் இப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரோகித் வெமுலா ஒரு தலித் அல்ல என்பதை ஊடகங்களில் திரும்ப திரும்ப சொல்லிவருகிறார். அதன் உள்நோக்கம் என்பது வெமுலா மரணத்திற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்திரேயா ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டம் பாய்ந்துவிட கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பொய்யை கூறி அதை உண்மை போல் சித்தரிக்க முயற்சிக்கிறார். இதுவும் ஒரு பார்ப்பன சூழ்ச்சியே. நாகை மாவட்ட திருநாள்கொண்டசேரியில் இறந்துபோன தலித் முதியவர் உடலினை பொதுப்பாதை வழியாக எடுத்து செல்வதற்கு அங்குள்ள ஜாதி வெறி பிடித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது பொதுப்பாதை வழியாக எடுத்துசெல்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த உத்தரவை நடைமுறைபடுத்தவேண்டிய தமிழக அரசும் நாகை மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தியது வன்மையான கண்டத்துக்குரியது.
அதுபோல் விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.எஸ். யோகா இயற்கை மருத்துவ கல்லூரி என்கிற அங்கீகாரம் பெறாத கல்லுரியில் பயின்ற மூன்று மாணவிகள் நிர்வாகத்தில் நெருக்கடியால் மரணமடைந்திருக்கின்றனர். இதற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சகமும்தான் பொறுப்பு தமிழக அரசு உடனடியாக தமிழகம் முழுவதும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடவேண்டும்” என கூறி உரையாற்றினார்.
ஆர்பாட்டத்தில் எழுத்தாளர் துரை குணா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் செல்வம், திராவிடர் விடுதலைக் கழக புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், பேராவூரணி ஒன்றிய செயலாளர் கோவிந்தன், சேது ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், தஞ்சை பெரியார் சித்தன், இஎஸ்ஐ ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழக மாவட்ட துணை செயலாளர் சம்பத் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 18022016 இதழ்