காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 14 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-தைப் புத்தாண்டு விழா, ஜனவரி 12 ஆம் தேதி காவல்துறை தடையைத் தகர்த்து எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களையும் கொண்டுள்ள பொங்கல் விழாக் குழு, இந்த விழாவை நடத்தி வருகிறது.
கடந்த காலங்களில் பெரியார் திராவிடர் கழகமும், கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் முன்னின்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்த போது, கடந்த 10 ஆம் தேதி காலை காவல் துறை உதவி ஆணையர் (மயிலைப் பகுதி) விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அன்று நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள். அதற்குப் பிறகு பொங்கல் விடுமுறை. எனவே, விழாவை நடத்த விடாமல் தடுத்து விடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது. உடனே கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் அவசர அவசரமாக மனுக்களை தயாரித்து, அவசர வழக்காக எடுக்குமாறு நீதிபதி வி.தனபாலன் முன் கோரிக்கை வைத்தனர். நீதிபதி மனுவை விசாரணைக்கு ஏற்று, காவல்துறை அனுமதி மறுப்பை ரத்து செய்தார்.
நீதிமன்ற அனுமதி ஆணையுடன் 12 ஆம் தேதி தமிழர் திருநாள் விழா, கலை நிகழ்ச்சிகள், கொண் டாட்டங்கள் தொடங்கின. மாலை 6 மணியளவில் கும்மிடிப்பூண்டி அம்பேத்கர் கிராமிய பெண்கள் கலைக் குழு வழங்கும் பறை இசை, நடனம், பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பகுதி சிறுவர், சிறுமியர், பங்கேற்ற நடனங்களும், மாற்றுடைப் போட்டி நிகழ்ச்சி களும் நடந்தன.
விழாவின் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, சிறப்புரை நிகழ்த்தினார். தமிழர்களின் புத்தாண்டு தைப் புத்தாண்டுதான் என்றும், பெரியார் பிறந்த தமிழகத்தில் சாதி, தீண்டாமை ஒடுக்கு முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள், மூடநம்பிக்கைகள் பெருகி வருவதைத் தடுக்க, தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உரையாற்றினார்.
தொடர்ந்து, திருவல்லிக்கேணி பகுதி கழகச் செயலாளர் அருண் நடத்தி வரும் சுபராகம் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர். விழாவையொட்டி அயன்புரம் கழகத் தோழர் வேலு முயற்சி எடுத்து, தமிழர் உணவுத் திருவிழா விழாக்குழு சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். மாட்டுக்கறி பிரியாணி, மாட்டு வால் சூப், வாத்து இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.
அனுமதி பெற்றுத் தந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கலைஞர்களுக்கு, விருந்தினர்களுக்கு ஆடைகள் போர்த்தப்பட்டு, கழகத்தின் காலண்டர், புரட்சிப் பெரியார் முழக்கம் வெளியிட்ட ஜாதி ஒழிப்பு மலர், சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன. 10.15 மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 16012014 இதழ்