கழகத் தலைவர்-தோழர்கள் மீதான வழக்கு: பிப்.12இல் இறுதி விசாரணை
சிறைப்படுத்தப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் அம்பிகாபதி, அருண்குமார், கிருட்டிணன் ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் (4.2.2014) அன்று நீதிபதிகள் எஸ்.இராஜேசுவரன், பி.என்.பிரகாசு அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை நேர் நின்றார். அரசு வழக்கறிஞர் வராததால் வழக்கை பிப்.28 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் கேட்டார். இதற்கு மூத்த வழக்கறிஞர் வைகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் வரவில்லை என்று கூறி அரசு வழக்கைத் தள்ளிப் போட விரும்புவதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது. இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியதாகும். 90 நாட்களாக ஒரு இயக்கத்தின் தலைவர் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். அவர், இன்றைக்கே விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் நிலை. வருமான வரித் துறை அலுவலகம் தாக்கப்பட்டது என்பது மட்டுமே இந்த வழக்கு. அதில் உடைமை பாதிப்புக்கூட ஏதும் கிடையாது. தள்ளிப் போடுவதை அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார் வைகை.
நீதிபதிகள் வாதத்தை ஏற்றுக் கொண்டனர். 28 ஆம் தேதி வரை தள்ளி வைக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் பிப்.12 ஆம் தேதி வழக்கு இறுதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். அன்று அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாவிட்டாலும் வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண், வழக்கிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கழகத் தோழர்கள் நீதிமன்றம் வந்திருந்தனர்.