அறிவியல் காரணங்களை விளக்கி கழகத்தின் பரப்புரைப் பயணம்: ஒரே ஜாதிக்குள் திருமணம் வேண்டாம்
ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் – உடல்நலம், மனநலம் பாதிக்கப்படுவதை அறிவியலோடு விளக்கி, கழகத்தின் பரப்புரைப் பயணம் வெற்றி நடை போடுகிறது.
சங்க இலக்கியக் காலம் தொடங்கி இன்று வரை ஒரே ஜாதிக்குள் தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக நாம் செய்து வரும் திருமணங்களால், நமது எதிர்காலத் தலைமுறையின் மனநலமும், உடல் நலமும் மிகவும் கேடான நிலைக்குப் போய்விட்டது. அறிவியலுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும், உயிரியல் இயற்கைக்கும் எதிரான அகமண முறை என்னும் ஒரே ஜாதிக்குள் நடைபெறும் திருமணங்களைப்பற்றிய அதிர்ச்சியான அறிவியல் உண்மைகளை விளக்கும் நோக்கிலும் – மருத்துவ உலகமும், ஆராய்ச்சியாளர் களும் தமக்குள் மட்டுமே அறிந்து வைத்திருந்த இந்தக் கருத்துக்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று ஒரே ஜாதிக்குள் செய்து வரும் திருமணங்களால் விளைந்துள்ள மருத்துவ பாதிப்புகள் பற்றி விளக்கும் நோக்கிலும் – ஜாதி, மத, தேசிய இன, நாட்டு மறுப்புத்திருமணங்களால் விளையும் நன்மைகளைப் பற்றி விளக்கும் நோக்கிலும் – “அகமண முறையை அகற்றுவோம்! ஆரோக் கியமான தலைமுறை வளர்ப்போம்!” என்ற முழக் கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக்கழகம் ‘சுயமரியாதை – சமதர்மப் பரப்புரைப் பயணம் 2014’ என்ற பெயரில் பரப்புரைப்பயணத்தைத் தொடங்கியது.
பிப்ரவரி 16 அன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 3 மணியளவில் கழக செயலவைத் தலைவர் தோழர் சு.துரைசாமி பயணத்தைத் தொடங்கி வைத்தார். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கோவை மண்டல அமைப்புச்செயலாளர் சி.விஜயன், செம்பட்டி ஆல்பர்ட், மதுரை பாபுகண்ணன் உட்பட பல தோழர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். கழக வெளியீட்டுச்செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி தலைமையில் மதுரை யாழ்மொழி, உடுமலைப் பேட்டை கவிதா, கோவை இராஜாமணி ஆகிய பெண் தோழர்கள் உட்பட 30 தோழர்கள் இப்பயணக் குழுவில் பணியாற்றுகின்றனர். பொள்ளாச்சி தோழர் விஜயராகவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்.
ஹோமியோபதி மருத்துவர் பாலா, “தான் சந்தித்த நோயாளிகளில் மரபணுக் குறைபாடுள்ள பலரை சந்தித்ததைப் பற்றிக் கூறி இந்தப் பயணம் மிகவும் அவசியமானது” என வலியுறுத்தினார். போராசிரியர் அரசு.முருக பாண்டியன் தனது உரையில், இந்து மதத்தின் இழிவுகளையும் அது ஏற்படுத்தியுள்ள வேறு பாடுகளையும் எடுத்துக்கூறி அகமண மறுப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.
பயணக்குழுவின் சொற்பொழிவாளர் விஜய ராகவன் தனது உரையில், “ உலக சுகாதாரநிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களைப் பட்டியலிட்டு, அகமண முறையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். தோழர் கனி உரையாற்றியரைத் தொடர்ந்து இறுதியாக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். தனது உரையில், காரைக்குடி பெரியார் இயக்கத்தின் வலிமையான பகுதியாக இருந்ததைச் சுட்டிக்காட்டி ஜாதியற்றோர் இட ஒதுக்கீடு பற்றி முழுமையான விளக்க உரை யாற்றினார். தோழர் முத்து நன்றி கூறினார். தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சியைச் சார்ந்த தோழர் சித்திக் அனைவருக்கும் உணவு வழங் கினார். மாலை 6.30 மணியளவில் சிவகங்கை பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. இரவு 8.00 மணியளவில் காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் பால்.பிரபாகரன், சிவகங்கை இராமச்சந்திரனார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய வரலாற்றையும், ஜாதியற்றோர் இடஒதுக்கீட்டையும் விரிவாக விளக்கி உரையாற்றினார். தோழர் விஜயராகவன், அகமணமுறையால் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகளைப் பற்றியும், மரபணுக் குறை பாடுகளையும் பட்டியலிட்டு உரையாற்றினார். பயணக்குழுவினர் காளையார்கோவிலில் தங்குவதற்கும் உணவிற்கும் தோழர்கள் நா.முத்துக்குமார், சி.முத்துக்குமார் ஆகியோர் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.
பிப் 17 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கடைவீதியில் பரப்புரை தொடங்கியது. அஞ்சுகுழிப்பட்டியில் நண்பகல் உணவை முடித்துக்கொண்ட தோழர்கள் கருந்திணையில் பயிற்சியில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணியளவில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி பரப்புரையில் ஈடுபட்ட தோழர்களை நேரில் கண்டு ஆலோசனைகளைக் கூறினார். கழகத் தலைவர் விடுதலையான நாளில் நேரில் சென்று அவரைக் காண இயலாத தோழர்களுக்கு இந்த சந்திப்பு பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வழங்கியது.
மாலை 4.30 மணியளவில் அஞ்சுகுழிப்பட்டி யில் தோழர் விஜயராகவன், தலைமுறை தலைமுறையாக ஒரே ஜாதிக்குள் மண முடிப்பதால் 3000 வகையான ஊனங்கள் ஏற்படுகின்றன. எனவே அகமண முறை கூடவே கூடாது என்பதை வலியுறுத்தி மாற்று ஜாதியில் மணம் முடித்தால்தான் ஆரோக்கியமான தலைமுறையை வளர்த்தெடுக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார். அவர் பேசி முடித்த பின் பொதுமக்களில் ஒருவர், “வேறு ஜாதியில் பெண் கேட்டால் என்னை அடிக்க வருவார்கள் கலவரத்தைத் தூண்டப்பார்க்கிறீர்களா” என்று கேட்டார். அதற்கு விஜயராகவன், “ உங்களிடம் கேட்டால் கொடுப்பீர்களா?” என்று கேட்டதற்கு “உயர்ஜாதிக்காரர்கள் கேட்டால் கொடுப்பேன்” என்று கூறினார். அதற்கு விஜய ராகவன், “உங்களுக்குக் கீழ்ஜாதிக்காரர்களிடம் சம்மந்தம் கொள்ள மனம் வராததற்கு காரணம் மனுசாத்திரப்படியான மனநிலைதான். அது காலங்காலமாக உங்கள் மூளையில் ஏற்றப்பட் டுள்ளது” என்று விளக்கிக்கூறி அவர்களைத் தெளிவடையச் செய்தார்.
மாலை 6 மணி கோபால்பட்டியில் தோழர் விஜயராகவன், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் வகுப்புரிமைக்காக பெரியார் காங்கிரசை விட்டு விலகியதையும், தொடர்ந்து போராடி 1951 இல் முதன்முதலில் இடஒதுக் கீட்டுக்காக அரசியல் அமைப்புச்சட்டத்தில் சட்டத்திருத்தம் உருவாகச்செய்து, வகுப்புவாரி உரிமையைப் பெற்றுத்தந்த வரலாற்றை எடுத்துக்கூறினார்.
பிப்.18 பகல் 12 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் தி.வி.க மாவட்டத் தலைவர் பெரியார்நம்பி தலைமை யில், தமிழ்ப்புலிகள் மையக்குழு உறுப்பினர் பெரியார் மணி, தலித் போராளிகள் முன்னணி கணேசன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் காளிமுத்து, ஒன்றியச் செய லாளர் ரங்கசாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி பாண்டியன் ஆகியோர் பரப்புரைக் குழுவை வாழ்த்தி உரையாற்றினர். தலித் போராளிகள் முன்னணி நிறுவனர் சூ.ச.மனோ கரன் தனது உரையில், “ஜாதி ஒழிப்பை முழக்கமாகக் கொண்டுள்ள எங்களுக்கு நீங்கள் மேற்கொண்டுள்ள பரப்புரைப் பயணம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆங்கிலேயரிடம் ஜாதி கிடையாது. மேலும் அவர்கள் உறவு முறைக்குள் மணம் செய்வது கிடையாது. அதனால்தான் அவர்கள் மிகவும் முன்னேறி உள்ளனர்” என்று பேசினார். அடுத்து வீதி நாடகமும், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாலை 6.00 மணியளவில் செம்பட்டி அருகிலுள்ள இராமநாதபுரத்தில் பரப்புரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியில் பங் கேற்றார். திராவிடர் கலைக்குழுவின் வீதிநாடகம் கிராமத்துப் பெண்களை வெகுவாகக்கவர்ந்தது. தோழர் விஜயராகவன், தோழர் இளவரசன் ஆகியோர் உரைக்குப் பிறகு பொது மக்களிட மிருந்து கேள்விகள் வந்தன. ஒரே ஜாதிக்குள் பிறந்த குழந்தைகள் பலர் நல்ல மன நிலையிலும், பிறக்கிறார்களே எனக் கேட்டனர். தோழர்கள் அதற்கு உரிய பதிலை வழங்கினர். ஒரே ஜாதிக்குள் திருமணம் செய்வதால் மரபணுக் கோளாறுகள் தாக்குவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு ஜாதிக்குள் திருமணம் செய்யும் இணையர்களின் வாரிசுகளுக்கு இந்த குறைபாடுகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கினர். இவை தொடர்பாக விரிவாக அறியவேண்டுமானால் எங்கள் தோழர்களிடம் உங்கள் முகவரிகளைத் தெரிவியுங்கள் என அறிவித்தவுடன் ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று தங்கள் முகவரிகளைக் கொடுத்தனர்.
இரவு 7.30 மணியளவில் பாளையங் கோட்டை கிராமத்தில் வீதிநாடகத்தையும் தோழர்களின் உரையையும் கவனித்துக் கேட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியின் இறுதியில், தாங் களாகவே முன்வந்து, நீங்கள் சொல்வதுபோல ஒரே ஜாதிக்குள் தொடர்ந்து மணம் முடித்ததால் எங்கள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் வந்துள்ளன என்றனர். எடுத்துக் காட்டாக அந்த ஊரில் உள்ள ஒரு குழந்தைக்கு 8 வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டு கையும் காலும் செயலிழந்துவிட்டது. ஒரு பையன் மூளை வளர்ச்சியில்லாமல் இருக்கிறான், மேலும் சிலருக்கு நீங்கள் சொல்வது போன்ற குறை பாடுகள் உள்ளன என அந்தக் குறைபாடுள்ள குழந்தைகளையும் அழைத்துவந்து காட்டினர். இவை தொடர்பாக விரிவாக அறிந்துகொள்ள பரப்புரைக் குழுவிடம் தங்களது முகவரி களையும் பதிவு செய்தனர்.
பரப்புரைக் குழுவில் உள்ள உடுமலைப் பேட்டைதோழர் கவிதா அவர்களின் மகள் யாழ்மொழியின் பிறந்தநாளை பரப்புரைக்குழு தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். திண்டுக்கல்லைச் சுற்றி மூன்று நாட்கள் நடை பெற்ற பரப்புரையில் தோழர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் அந்தோணி பீட்டர் ராஜ், செம்பட்டி தேவகி ஆகியோர் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தோழர்கள் சுகுணாதிவாகர், விஜி, ஞானசண்முகம், பாடியூர் குமார், செம்பட்டி பாபு, அஞ்சுகுழிப்பட்டி கனகராஜ், வலையபட்டி செல்வராஜ், பெரியார் ஆட்டோ நிறுத்தம் தலைவர் நாகராஜ், அழகு மலை, தமிழ்நாடு உணவகம் பாண்டியன் ஆகியோர் உணவுக்கான தொகையை நன்கொடையாக வழங்கினர்.
ஒரே ஜாதிக்குள் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வேறு ஜாதியில் திருமணம் செய்தால் வெட்டுவோம், குத்துவோம் என்று வெளிப்படையாக பல்வேறு ஜாதித் தலை வர்களும் முழங்கிவரும் சூழலில், அமைதியாக, ஜாதிமறுப்புத்திருமணங்களை ஆதரித்தும், ஒரே ஜாதித் திருமணங்களை எதிர்த்தும் கிராமம் கிராமமாக பரப்புரை நடக்கிறது. முக்கியமாக, பெண்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கவனிக்கின்றனர். “நீங்கள் சொல்வது உண்மை, எங்கள் ஊரிலும் நீங்கள் சொன்னபடிதான் நடந்துள்ளது” என அவர்களே நமக்கு ஆதாரங்களைச் சொல்வதும், இவை பற்றி விரிவாக அறிய விரும்புகிறோம் என வரிசையாக நின்று தோழர்களிடம் பெயரையும், செல் எண் களையும் கொடுத்துச்செல்கின்றனர். மக்களது இத்தகைய ஆதரவுப்போக்கு பயணக்குழு வினருக்கு மிகுந்த நம்பிக்கையையும், ஊக்கத்தை யும் அளித்துள்ளது.
செய்தி: மதுரை யாழ்மொழி
பெரியார் முழக்கம் 27022014 இதழ்