அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்!: மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாள்
அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்!
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
உங்கள் பொய்மை பேச்சும்
இருட்டுக் காரியங்களும்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
தாய்மை எமக்கென
தம்பட்டம் அடித்து
நீவீர் பூட்டிய அடிமை
விலங்குகள் அனைத்தும்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
பெண்மை போற்றுவோமென
தெருவெல்லாம் கூவிவிட்டு
மனைதோறும் அடிமைத்தன
ஆணிவேரை வார்த்தெடுக்கின்ற
உங்கள் இரட்டை நாக்கு
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
தாய்மை என்றாலும்
தாரமே என்றாலும்
“சேவை செய்தே கடவாய்” எனச்
சபித்துச்சொன்ன – உங்கள்
மறைகள் அத்துணையும்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
என் ஜனனத்தின் வாயிலை
போகத்தின் பொருளாக
வார்த்தெடுத்த உங்கள்
வேட்கை நரம்புகள்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
தேவதை என்று கூறியே
எங்கள் கைகளில்
கரண்டியை கொடுத்த – உங்கள்
அழுகுணி ஆட்டங்கள்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
தாலி எனக்கயிற்றை கட்டி
சாகும்வரை எனை ஆளும்
சாக்கடை அரசியல்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
கல் ஒரு பெண் என்றாலும்
அதற்கும் கற்பு உண்டென
அடித்துக் கூறுகின்ற
உங்களின் சூட்சும பிரச்சாரங்கள்
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
அடிமை என்றறிந்தும்
அதில் ஊறித்திளைக்கின்ற
தையலின் அறிவுப்பேதமை
அழிந்தே போகட்டும்!
ஒழிந்தே போகட்டும்!
போர்க்களமிட்டுக் கூவி
சடுதியில் வருகின்றோம்!
நீங்கள் எங்களுக்குப் பூட்டிய
விலங்குகளின் சாவியை
பத்திரமாய் வைத்திருங்கள்…
உங்களை பூட்டிவைக்க அல்ல
எங்களை விடுவித்துக் கொள்ள!!
– இரவி
(மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாள்)