இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு

இராஜஸ்தான், கருநாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மனித உரிமை அமைபபுகள் சென்னையில் மார்ச் 8, 9 தேதிகளில் கூடி தூக்குத் தண்டனை ஒழிப்பு மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் செயல் திட்டங்களை வகுத்தன. இந்திய அரசு மரணதண்டனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் நம்பிக்கையுள்ள தேசிய மாநில கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் வேண்டுகோள் விடப்பட்டது. கருணை மனு காலதாமதத்தின் அடிப்படையில் 15 தூக்குத் தண்டனை கைதிகளை உச்சநீதிமன்றம் விடுவித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனித உரிமைக் குழுக்கள் வரவேற்றன.

இரண்டாம் நாள், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்; அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் விரிவாக விவாதித்தனர். தமிழர் பிரச்சினை என்ற அளவில் சுருக்கிவிடாமல், தெற்காசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் நடந்த போர்க் குற்றம், இனப்படுகொலை என்ற கண்ணோட்டத்தில் இதை தெற்காசியப் பிரச்சினையாக அணுகி, தலைநகர் டெல்லியில் மனித உரிமை அமைப்புகளைத் திரட்டி, இலங்கை அரசுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்கா, அய்.நா.வில் கொண்டு வந்த தீர்மானம் மென்மையாகவே உள்ளதால் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை அய்.நா.வில் இந்தியாவே கொண்டுவரவேண்டும் என்று மனித உரிமைக் குழுக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ஆய்வு மற்றும் கருத்தரங்கில், பரம்ஜித்சிங் (புதுடில்லி), சுஜாதா பத்துரா (மே.வங்காளம்), சந்திசேகர் (ஆந்திரா), பாஸ்கர்ராவ் (ஆந்திரா), ராமசாமி (கருநாடகா), ரமேஷ் (கருநாடகா), ரகுநாத் (ஆந்திரா), கவிதா ஸ்ரீவத்வா (ராஜஸ்தான்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். பி.யு.சில் தேசிய செயலாளர் டாக்டர் சுரேஷ், தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் சரசுவதி, செயலாளர் டிஎ.ஸ்.எஸ்.மணி பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்  செயலாளர் விடுதலை இராசேந்திரன் அழைக்கப்பட்டிருந்தனர். ராஜஸ்தானில் 22 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தியதற்காக கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பன்வாரிதேவி இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, ஈழத் தமிழர் மீது நடக்கும் இனப் படுகொலைக்கு இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் முழக்கம் 13032014 இதழ்

You may also like...