பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது.
இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால் அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கவே அவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இப்படியான காரணங்களை எந்த நாட்டிலும் கேட்க முடியாது.
கயர்லாஞ்சியில் சுனிதா வன்புணர்வு செய்யப் பட்டது குடிபோதையிலோ அல்லது நொடிநேர வெறியிலோ அல்ல. அது ஒரு பெருங்கூட்டத்தால், ஊரின் பொது வெளியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டம். அந்த வெறியை ஊட்டியது ஜாதி. ஆதிக்க ஜாதி ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட, ஆதிக்க ஜாதிப் பெண்கள் சுற்றி நின்று தூண்டிவிட நடத்தப்பட்ட அந்த குற்றச் செயலை செய்வதற்கான துணிவை அவர்களுக்கு அளித்தது இந்த சமூகத்தின் ஜாதிய கட்டமைப்பும் அதை காத்து நிற்கும் அரசமைப்பும். இப்படியான ஒன்றையும் நீங்கள் வேறு எந்த நாட்டிலும் கேட்கவோ பார்க்கவோ முடியாது.
வாசாத்தியிலும், அந்தியூரிலும், சத்தியமங்கலம் காடுகளிலும் கேட்ட பெண்களின் ஓலம், அதிகாரத்தின் அடக்குமுறை வன்முறையாலேதான். அதிகார அத்துமீறல்களும், சீருடை ரவுடிகளின் பாலியல் வன்கொடுமைகளும்கூட பிற நாடுகளில் நடக்கக்கூடும். ஆனால், இங்கு நிகழ்ந்தவற்றில் பாதிக்கப்பட்டப் பெண்கள் அனைவரும் பழங்குடியின, ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பது தற்செயலானது அல்ல. மணிப்பூரிலும், பிற வட கிழக்கு மாநிலங்களிலும்கூட அதிகாரத்தின் கொடிய கரங்கள் நெறிப்பது பழங்குடியினப் பெண்களையே.
இங்கு மட்டும்தான் குற்றவாளியைவிட பாதிக்கப் பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஊட்டப்படுகிறது. தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை வெளியேச் சொல்வது தனக்குத்தான் அவமானம் என்ற சிந்தனை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆழ விதைக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வேளை துணிந்து அப்பெண் வெளியே சொன்னால், சமூகம் அவளை விலக்கி வைக்கிறது. வசை பாடுகிறது. குற்றத்தை அவள் மீதே சுமத்துகிறது.
“தன்னை வன்புணர்வு செய்ய வந்தவர்களிடம் அப்பெண் அண்ணா என்று கெஞ்சியிருந்தால் அவள் தப்பித்திருக்கலாம்” – அசராம் பாபு, சாமியார்.
“இருபாலர் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். திருமணத்திற்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வது தடை செய்யப்பட வேண்டும்., பெண்கள் சரியான முறையில் உடை அணிய வேண்டும்.” – ஜமாத்-ஈ-இஸ்லாம்-ஹிந்த் தலைவர்.
“பாரதத்தைவிட இந்தியாவில்தான் அதிக வன்புணர்வுகள் நடக்கின்றன” – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
“ஜாதகம் சரியில்லாததால்தான் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்” – சட்டிஷ்கர் உள்துறை அமைச்சர்.
மேலே உள்ளவை தனி மனிதர்களின் கருத்துகள் அல்ல. இச்சமூகத்தின் எண்ணவோட்டம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த எண்ணவோட்டத் திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த எண்ணவோட்டத்திலிருந்து அவர்கள் விலகாதவாறு இந்த சமூகமும் அதன் அங்கமாய் இருக்கிற ஊடகங் களும் மிக கவனமாக பார்த்துக்b காள்கின்றன.
1980களில் ‘புதிய பாதை’ என்றொரு படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அது அந்த இயக்குநரின் முதல் படமாக இருந்த போதும் பெரும் வெற்றி வாய்ப்பை பெற்றது. அதிலும் அதற்கான விளம்பரங்களில் “பெண்கள் கூட்டம் கூட்டமாக காண வரும் படம்” என்று பெருமையுடன் போட் டனர். அந்த படத்தின் கதை இதுதான். “ஒரு ரவுடி, ஒரு பெண்ணை அவளது திருமணத்திற்கு முதல் நாள் வன்புணர்வு செய்கிறான். இந்த செய்தியை அறிந்த மணமகன், இதை ஒரு விபத்தாக எடுத்துக் கொள்கிறேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறான். ஆனால், அப்பெண் அதை மறுத்து அந்த ரவுடியை தேடிச் சென்று அவனையே திருமணம் செய்து, அவனை திருத்தி அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறாள்.”
இக்கதை எண்பதுகளில் வந்ததுதானே என்பவர்களுக்கு….. 2004இல் வந்த படம் ‘தென்றல்’. அக்கதையின் நாயகி, தன்னைவிட வயதில் மிகவும் மூத்த ஒரு எழுத்தாளனை அவனுக்குத் தெரியா மலேயே விரும்புவாள். ஒரு கட்டத்தில், அவளை ஒரு பாலியல் தொழிலாளி என்று நினைத்து அந்த எழுத்தாளன் அவளிடம் உடலுறவு வைத்துக் கொள்வான். நாயகி அதை தனக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி, அவன் மூலம் உண்டான குழந்தையை பெற்று, வளர்த்து, அவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போவாள்.” இரண்டு படத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
வன்புணர்வு பற்றிய திரைப்படங்களின் சித்தரிப்பு மூன்றே விதம்தான். ஒன்று வன்புணர்வுக்கான முயற்சியின் இறுதிக் கட்டத்தில் நாயகன் வந்து காப்பாற்றி விடுவான். (ஆனால் நெடுநேரம் நடக்கும் அந்த முயற்சியின் அந்த இறுதிக் கட்டம் வருவதற்கு முன் காமிராவால் அப்பெண்ணை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்கொடுமை செய்து விடுவார்கள்) இரண்டாவது, வன்புணர்வு ஒருவேளை நடந்துவிட்டால், அப்பெண் இறந்து போவாள். நாயகன் பழிவாங்குவான். அல்லது திருந்துவன். மூன்றாவதுதான் மிக சிறப்பானது. வன்புணர்வு செய்தவனையே அப்பெண் ‘வெற்றிகரமாக’ மணம் முடிப்பாள்.
இந்த மூன்றாவது சித்தரிப்புக்குப் பொருள் வெகு எளிமையானது. ஒருவன் உங்களை அடித்து அவமானப்படுத்தி விட்டால், “ஒரு முதலாளிக்கு தான் அடிப்பதற்கும் அவமானப்படுத்துவதற்கும் உரிமை உள்ளது. அவன் உன்னை அடித்து விட்டதால் இனி அவன்தான் உன் முதலாளி. அவனிடம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இரு” என்பதுதான்.
இப்படியான சித்தரிப்பும் வேறு எந்த நாட்டிலும் காண கிடைக்காத அற்புதம்.
இந்த சித்தரிப்புக்கு பண்பாடு என்று பெயராம். இருக்கட்டும். பண்பாடு என்றால் யாருடைய பண்பாடு? எதன் பண்பாடு? என்ற கேள்வி எழுகிறது. பண்பாட்டை காப்பதற்காகவே வன்புணர்வு செய்ததாக தில்லி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் எதிலிருந்து வருகிறது?
மநு சாஸ்திரம் அத்தியாயம் – 9
- மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களை புணரு கிறார்கள்.
- மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பன்மையும் இயற்கையாக வுடையவர்கள்.
- மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரமன் சிருட்டித்த போதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்கான மேலான முயற்சி செய்ய வேண்டியது.
- படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு கற்பித்தார்.
- மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆக, கெட்டுப் போகும் தன்மையுள்ள பெண்களை காப்பதற்கான பெரும் பொறுப்பை ஏற்றே அவர்கள் மணமாகாமல் ஒரு ஆணுடன் இரவு நேரத்தில் தனியே சென்ற பெண்ணிற்கு தண்டனை கொடுத்துள்ளனர். இந்த தண்டனையின் மூலம் அவர்கள் சொல்ல நினைத்த செய்தி நேரடியானது. இனி பெண்கள் இரவில் வெளியே செல்லாதீர்கள். அதிலும் தந்தை, கணவர், சகோதரர், மகன் அல்லாத யாருடனும் செல்லாதீர்கள். அதிலும் மணமாகாத பெண்கள் செல்லவே செல்லாதீர்கள். சென்றால் இந்த கதிதான் உங்களுக்கும். இதுதான் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தி. அந்த செய்தி, ஊடகங்கள் மூலமாக மிக நன்றாகவே மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. சாதாரணமாகவே பெண்கள் தனியே பயணிப்பதை அச்சத்துடன் தவிர்க்கும் சமூகம், இதற்கு பின் அச்சம் அதிகமாகிப் போய் நிற்கிறது.
பொருளாதார அடிப்படையிலும், கல்வியிலும் முன்னேறிய போட்மாங்கே குடும்பத்தின் பெண்களை வன்புணர்வு செய்த ஆதிக்கசாதியினர் விடுத்த செய்தி, “தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களாகவே இருக்க வேண்டும். முனனேற முயன்றால் இந்த கதிதான்” என்பதே.
பல ஆண்டுகாலம், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் மிகவும் போராடி சில அடிகள் முன் நகர்த்திய சமூகத்தை, ஒரே வன்முறையில் பல அடிகள் பின்னோக்கி நகர்த்துவதில் ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்று வருகின்றனர்.
இன்று ஜாதியை முன் வைத்து காதல் திருமணங் களுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை ஆதிக்க ஜாதி அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. இதுவும் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறையே. ஒரு பெண் எந்த ஜாதியை சேர்ந்த வளாக இருந்தாலும், தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவளிடமிருந்து பறிப்பதாகவே இவர்களின் முன்னெடுப்புகள் உள்ளன. பெண்களின் அந்த உரிமையை மிகவும் மலினப்படுத்தி, ஜீன்ஸ் பேண்டுக்கும், கூலிங் கிளாசுக்கும் மயங்கி போகிறார்கள் என்பது ஆணாதிக்கத்தின் உச்சம்.
ஒரு மனிதனின் வாழ்க்கையின் வளத்தை காட்டும் அடையாளங்களாக சொத்தும், நகைகளும் இருப்பது போலவே அவன் குடும்பத்து பெண்களும் அவனது ‘கவுரவத்தின்’ அடையாளமாகவே உணரப் பட்டுள்ளது. பெண்ணும் ஒரு உடைமை. அதனால் அவளது வாழ்வின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை அவளது குடும்பத்தின் ஆணுக்கே உள்ளது. அதை மீறி அவள் முடிவெடுத்தால், அது கொடுங்குற்றம். இந்த மனநிலையிலிருந்தே காதல் திருமணங்கள் எதிர்க்கப்படுகின்றன. ஜாதி வெறியும் ஆணாதிக்கமும் இணைந்து நின்று பெண்களின் உரிமைகளை பறிப்பதில் முனைப்பே காட்டுகின்றன. அதற்கு அடிப்படையாக இந்து மத இந்திய உளவியல் உள்ளது. இந்து மத உளவியலிருந்து விடுபடாமல் பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகளுக்கு முடிவு ஏற்படாது.
பார்ப்பனியம் – மதத்தின் பெயரால் கட்டமைத்த சமூக உளவியல்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெண்ணடிமைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கச் சொல்கிறது.மேலை நாடுகளில் பெண்கள் மீதான குற்றங்கள் மீதான பார்வையிலிருந்து இது வேறுபடும் புள்ளியாக இருப்பதை ஆழமாக பதிவு செய்கிறது, இக்கட்டுரை.
பெரியார் முழக்கம் 27032014 இதழ்