இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மனித மலத்தை எடுத்தல், சாக்கடைக் குழிக்குள் இறங்கி மூச்சுத் திணறி இறத்தல் என்று துப்புரவுத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்டோர், இப்போதும் ஈடுபடுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு அவர்கள் புனர்வாழ்வுக்கான திட்டங்களையும் முன் வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகி, என்.வி.இரமணா ஆகியோரடங்கிய அமர்வு 27.3.2014 அன்று பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆபத்தான வேலையில் உயிரிழந்த குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தும் ஒப்பந்தக்காரர்கள் குற்றத்துக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் ‘தொழிலில்’ ஈடுபடுத்தப்படுவோரை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வுக்காக மாத ஊதியத்துடன் கூடிய வேறு தொழில் பயிற்சிகள், குடியிருப்பு மனைகள் அல்லது வீடுகள் வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றுத் தொழில் செய்வதற்கான சலுகைக் கடன் வழங்குதல் ஆகிய திட்டங்களை முன் வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இரயில்வே துறையில், இப்போதும் நடைமுறையில் உள்ள மனித மலத்தை மனிதர்களே எடுக்கும் முறைக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வைத்து முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும் என்றும் கண்டிப்புடன் அறிவித்துள்ளது.

தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேலும் வலிமையான பிரிவுகளை இணைத்து மார்ச் 4 ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழியாக மத்திய அரசு ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. மனித மலத்தை மனிதர் எடுக்கச் செய்வதும், ஒரு வன்கொடுமை குற்றம்தான் என்றும், அத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மறுவாழ்வுக்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த அவசர சட்டம் வலியுறுத்துகிறது. மார்ச் 29 ஆம் தேதி மயிலாடுதுறையில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இந்த அவசர சட்டத்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், சாதகமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 03042014 இதழ்

You may also like...