‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்)

திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு முழுமையாக கதவு இழுத்து மூடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட முதல் நிலை அதிகாரிகள் 27 பேரும், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த 18 பேரும் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 மட்டுமே!

‘மைனாரிட்டி’த் துறைக்கான அமைச்சகத்தில் கூட பார்ப்பனர்களே அதிகம். இங்கு முதல் நிலை அதிகாரிகளாக 16 பார்ப்பனர்-உயர்ஜாதியினரும், ‘தலித்’ பிரிவில் 7 பேரும் உள்ளனர். ஒரே ஒரு அதிகாரிதான் பிற்படுத்தப்பட்டவர்.

நாடாளுமன்றத் துறைக்கான அமைச்சகத்திலும் (புதுவை நாராயணசாமி அமைச்சராக உள்ளார்), ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அதிகாரிகூட இல்லை. சென்னையைச் சேர்ந்த செயல்பாட்டாளர் முரளிதரன், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இத்தகவல்களைப் பெற்றுள்ளார். “தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகளை அரசியல் சட்டப்படி முழுமையாக அமுல்படுத்துவது சட்டரீதியான கடமை. மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகம், இதை கண்காணித்து அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. ஆனாலும், அலட்சியப்படுத்துகிறார்கள்” என்று முரளிதரன் கூறினார். கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க.வினர் அமைச்சராக இருந்த துறைகளிலேயே (சுப்புலட்சுமி,  தயாநிதிமாறன், ராஜா) இப்படி இடஒதுக்கீடுகள் முற்றாக புறக் கணிக்கப்பட்டும், அவர்கள் இது குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக நீதித் துறைக்கான அமைச்சகத்தில் உயர் பதவிகளில் 61 பேர் பார்ப்பனர்-உயர்ஜாதி யினராகவும், தாழ்த்தப்பட்டவர் 5 பேர், பழங்குடியினர் 4 பேர் மட்டுமே உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர். தகவல் தொடர்பு அமைச்சகத்திலும் பார்ப்பன முன்னேறிய சாதிப் பிரிவினர் 71.23 சதவீதம் பேர் உயர் அதிகாரிகளாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் 7.13 சதவீதம் மட்டுமே!

முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நிறைந்த மத்திய அமைச்சகம் பார்ப்பனர்-உயர்ஜாதியினர் ஆதிக்கப் பிடிக்குள்தான் சிக்கியிருக்கிறது. தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுகள் புறந்தள்ளப்படுகின்றன.

கார்ப்பரேட் பணத்தில் கொழிக்கும் காங்கிரஸ்-பா.ஜ.க.

2004-05-லிருந்து 2011-2012 வரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் :

காங்கிரசுக்கு…

ஆதித்யா குழுமம் – 36.4 கோடி; டோர்ரன்ட் பவர்- 11.9 கோடி; பார்தி என்டர்பிரைசஸ்-11 கோடி; டாட்டா குழுமம்-10 கோடி; வேதாந்தா குழுமம்-6 கோடி; அடி அன்ட் சி. அய்.-5.5 கோடி; அய்.டி.சி.-5 கோடி; வீடியோகான்-4.3 கோடி;  லார்சன் அன்ட் டூப்ரோ-3.3 கோடி; ரோகன் புரொமோட்டர்ஸ்- 3 கோடி.

பா.ஜ.க.வுக்கு

ஆதித்யா பிர்லா குழுமம் – 26.6 கோடி; டோர்ரன்ட் பவர்-13 கோடி; ஆசியா நெட்வி ஹோல்டிங்-10 கோடி; வேதாந்தா குழுமம்-9 கோடி; டாட்டா குழுமம்-6.9 கோடி; வீடியோகான் இன்டஸ்டிரீஸ்-

6.3 கோடி; பார்தி என்டர்பிரைசஸ்-6.1 கோடி; சிறீ போத்பாய் உக்பாய் விகாரியா-5 கோடி; சாய்நாத் என்டர்பிரைசஸ்-5 கோடி; பஞ்ச் லியார்ட்-4.6 கோடி.

இவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட நன்கொடைகள் மட்டுமே.

தகவல் : ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, மே.3, 2014

பெரியார் முழக்கம் 08052014 இதழ்

 

You may also like...