காந்தி தேசத்தில் மோடியின் ‘தீண்டாமை’
குஜராத்தில் ‘நவஸ்ராஜன்’ என்ற சமூகத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் மார்ட்டின் மக்வான். 2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் அய்.நா.வின் இன வெறி எதிர்ப்பு மாநாடு நடந்தது. ஜாதிப் பாகுபாட்டையும் இனப் பாகுபாடாக அய்.நா. ஏற்கக் கோரி இந்தியாவிலிருந்து பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் கருத்துகளை உருவாக்கின.
இந்தியாவிலிருந்து பங்கேற்கச் சென்ற மனித உரிமை அமைப்புகளின் கூட்டியக்கத்துக்கு தலை வராக செயல்பட்டவர் மார்ட்டின் மக்வான். குஜராத்தில் மனித மலத்தை கைகளாலேயே ‘தீண்டப் படாத’ மக்கள் துடைத்துக் கழுவும் அவலத்தை பட மாக்கி, அவர் சர்வதேச பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்டியபோது – அது அதிர்ச்சி அலைகளை உருவாக்கிற்று. கடந்த 2007 ஆம் ஆண்டு குஜராத்தில் நிலவும் மிக மோசமான தீண்டாமை கொடுமைகள் பற்றி விரிவான ஆய்வு ஒன்றை மக்வான் மேற் கொண்டார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு குஜராத்தில் 1589 கிராமங்களைத் தேர்வு செய்து, 2 ஆண்டுகாலம், விரிவான ஆய்வுகளை நடத்தி, அறிக்கையைத் தயாரித்தது. அதன்படி குஜராத்தில் நிலவும் மோசமான தீண்டாமைக் கொடுமைகள் புள்ளி விவரத்துன் பட்டியலிடப்பட்டன.
அதன் விவரம்:
- ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 98.4 சதவீத கிராமங் களில் வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி திருமணம் செய்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி, ஊரை விட்டே வெளியேறுகிறார்கள்.
- 98.1 சதவீத கிராமங்களில் தலித் அல்லாத மக்கள் குடியிருப்புப் பகுதியில் தலித் மக்களுக்கு வாடகைக்கு வீடு எடுக்க முடியாது.
- 97.6 சதவீத கிராமங்களில் தலித் மக்கள், தலித் அல்லாதவர்களின் குடிநீர் பானையையோ பாத்திரங்களைதேயா தொட்டால் தீட்டாகிவிடும் என்று கருதுகிறார்கள்.
- 67 சதவீத கிராமங்களில் தலித் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு டீக்கடைகளில் டீ வழங்குவ தில்லை. அப்படியே வழங்கினாலும் தனிக் குவளையில்தான்! (மோடி தேநீர் விற்ற காலத்தி லிருந்து இதுதான் நிலைமைபோல)
- 56 சதவீத கிராமங்களில் டீக்கடைகளில் தலித் மக்களுக்கு ‘தனிக் குவளை’தான். அவர்களே அதைக் கழுவி வைக்க வேண்டும். இதற்கு ‘ராமன் குவளை’ என்று பெயர்.
- 53 சதவீத கிராமங்களில் மதிய உணவுத் திட்டத்தில் தலித் குழந்தைகளுக்கு தனி இடத்தில் உட்கார வைத்து உணவு தரப்படுகிறது. உணவுக்குப் பிறகு அவர்கள் தண்ணீர் குடிப்பதற்கு வீட்டுக்குத்தான் போக வேண்டும். 45 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் கடைகளுக்கு உள்ளே சென்று பொருட்களை வாங்க முடியாது. வெளியே நின்றுதான் வாங்க வேண்டும்.
- 99.1 சதவீத கிராங்களில் உட்சாதிகளுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு ஜாதிகளிடையே விதித்துள்ள தடையைவிட இந்த உட் ஜாதித் தடை மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
- தலித்துகளிலே தங்களை உயர் ஜாதியாகக் கருதும் குழுக்கள், கழிவுப் பொருட் களை அகற்றுவதை தங்களுக்குக் கீழாக உள்ள உட்ஜாதிப் பிரிவினரிடம் கட்டாயப்படுத்துகிறார்கள். 95.8 சதவீத கிராமங்களில் இதுதான் நிலை.
- தலித் மக்களுக்கான சுடுகாட்டில் சில தலித் உட் பிரிவினரின் பிணங்களை எரிப்பதற்கு 92.4 சதவீத கிராமங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
- தலித் பிரிவினரிடையே கீழ் ஜாதியாகக் கருதப்படும் குழுவினர், சுடுகாட்டில் கழற்றி வீசப்படும் உடைகளை சேகரித்து அதை அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
- 96 சதவீத கிராமங்களில் தலித் வேலையாட் களுக்கு மதிய சாப்பாடு – தனி இடத்தில். பிற ஜாதி ஆட்களோடு சேர்ந்து சாப்பிட முடியாது. தலித் வேலையாட்கள் சாப்பிட்டு எஞ்சியதை பிற ஜாதியினர் தொடாமல் இருக்க தூக்கி குப்பையில் வீசப்படுகிறது.
- தலித் மக்கள் வாழும் பகுதிக்கு – மதச் சடங்குகளை செய்வதற்கு தலித் அல்லாதவர்கள் 96 சதவீத கிராமங்களில் வருவது கிடையாது.
- பொது கோயில்களில் 90 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் நுழைவதற்கு தடை.
- பொதுக் குளம், பொதுக் கிணற்றில் தலித் அல்லாதவர் மீது தலித் மக்கள் புழங்கும் தண்ணீர் பட்டுவிடுமானால், அது அவமதிப்பு தீட்டாக கருதப்படுகிறது.
- 87 சதவீத கிராமங்களில் தலித் வீட்டு திருமணங் களில் உணவு தயாரிக்க வாடகைக்கு பாத்திரங்கள் மறுக்கப்படுகிறது. இது தவிர தலித்துகள் உள்ளூர் சலூன்களில் முடிவெட்ட முடியாது (73 சதவீத கிராமங்களில்); உடை தைக்க முடியாது (33 சதவீத கிராமங்களில்); பானை, சட்டி வாங்க முடியாது (61 சதவீத கிராமங்களில்);
- தலித் பிரிவினரிடையே கீழ் ஜாதியாக கருதப் படும் உட்ஜாதியினரை மேல்ஜாதியாகக் கருதும் ‘தலித்’துகள் பல்வேறு தீண்டாமைக்கு உள்ளாக்குகிறார்கள்.
இதுதான் குஜரத்தின் ‘வளர்ச்சி’! இந்த உண்மைகளை மறைத்து அப்பட்டமாக மோடிக்கு ஜால்ரா போடுகிறது, ஒரு கூட்டம்!
தகவல்: ‘பிரன்ட் லைன்’ மே 16, 2014
பெரியார் முழக்கம் 15052014 இதழ்