அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மன்னார்குடியில்:

19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகள் கொண்டப்படுகிறது. அரசு ஆணைகளை செயல்படுத்தவேண்டிய காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல் மத வழிபாட்டு முறைகளை பின்பற்றுவது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்து அரசு இயந்திரம் இயங்குவது போல் உள்ளது. இதுபோல் நடப்பதை மதசார்பற்ற நாடு என்பதற்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், அரசு ஆணைகளுக்கு எதிராகவும் உள்ளது என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

திராவிடர் விடுதலைக்கழக ஒன்றிய செயலாளர்கள் நீடா. முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் பன்னீர்செல்வம், மன்னை ரமேஷ், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், மன்னை நகர செயலாளர் சசிக்குமார், தஞ்சை பெரியார் சித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஈரோட்டில் :

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார், கழக வெளியீட்டு செயலாளர் கோபி இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

“அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு” என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் குமரகுரு, கோபி குணசேகரன் மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கோவையில் :

மத சார்ப்பின்மைக் கொள்கைக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை, பொதுத்துறை அலுவலகங்களில் மத விழாக்களும், வழிபாடுகளும், பூஜைகளும் அண்மைக் காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றது மதச்சார்பற்ற அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை நடத்துவது அரசாணைகளை அவமதிப்பதாகும் அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாகவும் அமையும் ஆகவே மேற்கண்ட அரசு ஆணையை நடைமுறைபடுத்தாததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, புறநகர் மாவட்ட தலைவர் மேட்டுபாளையம் இராமச்சந்திரன், மாநகர செயலாளர் நேருதாஸ், சூலூர் பன்னீர்செல்வம், திருப்பூர் தோழர்கள் பரிமளராஜன், அகிலன், மூர்த்தி, விஜயபாரதி, பாரூக், நிர்மல், லோகு, கிருஷ்ணன், ஸ்டாலின், கம்ப்யூட்டர் கார்த்திக், வீரபாண்டி ராஜேஷ், அன்னூர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பூரில்:

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று காலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் –  “அரசு அலுவகங் களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு” என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் நீதி ராசன் தலைமை தாங்கினார். கழக பொருளாளர்  துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 29102015 இதழ்

You may also like...