என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!
நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது. நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும் திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன். ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப்...