‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....