தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!
தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்...