பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1) கொளத்தூர் மணி
‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் இளந்தமிழகம் இயக்கத் தோழர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் சில செய்திகளை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரியார், தமிழ்த் தேசியம் அல்லது தேசியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அதனடிப்படையில் அல்லது அதற்கு பொருத்தமாக ஒரு தேசியத்தை முன் வைத்தாரா என்றால் இல்லை. அவர் எடுத்துக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையின் நீட்சியாகத்தான் தனித் தமிழ்நாட்டு கருத்தை முன்வைத்தார். என்றாலும்கூட தேசியம் என்ற சொல்லாடலில் உள்ள அனைத்து கூறுகளும் அதில் உள்ளடங்கி இருந்தன. பெரியார் தனது கொள்கைகளை, கோட்பாடு களாக வரையறுக்கவில்லை. அவர் அறிஞர்களை நோக்கி எழுதியவர் அல்ல; அறியாத பாமரர்களிடம்...