பறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்!
பார்ப்பனர்களின் இந்து மத, சாதிய, பார்ப் பனிய ஆதிக்கம் பெரும்பான்மை மக்கள் மீது மட்டுமின்றி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது செயல்பட்டுள்ள ‘பறவைகளின் மீதான பார்ப்பனியத்தின் நுண் அரசியல்’ இக்கட்டுரையின் பேசு பொருளாக அமைந்துள்ளது. பறவைகள், விலங்குகள், புழுப் பூச்சிகள், தாவரங்கள், செடி, கொடிகள், நீர்வாழ் உயிரினங்கள் என தமிழக நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த உயிரினங்களுக்கு இம்மண்ணுக்குரிய, புறச் சூழலுக்கு பொருத்தமாகவும், அவற்றின் செயல் பாடுகளையும், நிறங்களையும் அடிப்படையாக கொண்டு பொருத்தமானபெயர்களை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். கால்நடைகளை பின்தொடர்ந்து, அவற்றின் காலடித் தடங்களில் இருந்து வெளிவரும் புழுப்பூச்சிகளை பிடித்துண்ணும் பறவையை கண்டவுடன், ‘மாடு மேய்ச்சான்’, மாடு விரட்டி’, ‘உண்ணி கொக்கு’ என பொருத்தமான பெயர்களை தமிழர்கள் வட்டாரத்திற்கேற்ப சூட்டி மகிழ்ந்தனர். அதுபோலவே, இன்றைய தலைமுறை வியக்கும் விதமாக பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்களைச் சூட்டியிருந்தனர். அதில் பல பெயர்கள் சாதிய மேலாதிக்கத்திற்குள்ளாகியுள்ளது. தமிழில் பெரும்பாலான உயிரினங்களுக்கு பொருத்தமான பெயர்கள் அமைந்திருக்க, தட்டான்கள்(Dragonfly),...