125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்
சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர். இந்தியா வுக்கான பிரிட்டிஷ் அமைச்சரின் செயலாளராக தேர்வு பெற்று லண்டன் பயணமானபோது தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளைத் தொடங்கி விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், நடந்ததோ வேறு. சர். ஏ.டி. பன்னீர் செல்வத்தின் 125 ஆவது பிறந்த நாள் நினைவாக அவரது வரலாற்றுச் சுருக்கம் வெளியிடப்படுகிறது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அய்ம்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தென்னகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றவர். கடைசியாக இவருக்குக் கிடைத்த இந்தியா மந்திரியின் ஆலோசனையாளர் பதவியினை இவர் ஏற்றுத் தாயகம் திரும்பியிருப்பாரேயானால் தென்னகத்தின் – திராவிடத்தின் – தமிழகத்தின் அரசியலே வெகுவாக மாறியிருக்கும். ஆனால், என்ன செய்வது? இயற்கையும் தமிழர்க்குப் பகையாயிற்று. ஆம்! தமிழர்களை வஞ்சித்துவிட்டது! யார் – இந்த பன்னீர்செல்வம்? திருவாரூர் – நன்னிலம் பாதையில் செல்வபுரம் என்ற ஊர்,...