தலையங்கம் : கள்ள மவுனம்!
19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...