தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை
‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...