பெண் விடுதலை பேசும் ‘இறைவி’
எவரும் தொடுவதற்கு அஞ்சும் பிரச்சினையை திரைப்படமாக்க முன் வந்த துணிவுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அவரது எழுத்து-இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘இறைவி’ படம் பெண்ணுரிமை என்பதையும் தாண்டி பெண் விடுதலையைப் பேசுகிறது. ஆண்கள் தங்களிடம் கட்டி எழுப்பியிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற ஆணவத்துடன் எடுக்கும் முடிவுகள், பெண்களிடம் உருவாக்கும் கடும் பாதிப்புகளையும் வலிகளையும் அழுத்தமாக உணர்த்தி யிருக்கிறார் இயக்குனர். சிலப்பதிகாரம் – தமிழ் தேசிய இலக்கியமாக – தமிழ் தேசியவாதிகளால் முன் வைக்கப்படுகிறது. அதில் அடங்கியுள்ள பெண்ணடிமை சிந்தனையை பெரியார் கேள்விக்குள்ளாக்கினார். மாதவி எனும் தாசி வீட்டுக்குச் சென்ற கணவன் கோவலன், எப்போது திரும்பி வருவான் என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி காத்திருக்கிறாள் கண்ணகி. இதேபோல் கண்ணகி, தனது காதலன் வீட்டுக்குச் சென்றால், கோவலன் காத்திருப்பானா என்று பெரியார் கேட்ட கேள்வியை இத்திரைப்படமும் கேட்கிறது. கைவிட்டு ஓடிய காதலனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாத்திரம் இந்த படத்தில் காதலையும் திருமணத்தையும் ...