பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016
தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...