தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார். வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது. (தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள – 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில்...