“மன நிறைவோடு சாகத் தயார்!”
தமிழக அரசின் துணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற மா. கோபாலன், தனது 14ஆம் வயதிலேயே பெரியாரால் ஈர்க்கப்பட்டவர். கழகப் பணிகளில் பங்கேற்றவர். ‘ஆடும் பருவத்திலேயே எனை ஆட்கொண்ட பெரியார்’ எனும் தலைப்பில் அவர் எழுதிய நூலில் பல களப் பதிவுகளை செய்துள்ளார். அந்நூலிலிருந்து சில பகுதிகள் சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சிவஞானம் பிள்ளை பூங்கா ஒன்று உள்ளது. அங்குப் பெரியார் ஒரு நாள் பேசினார். அது திராவிடர் கழகத்தினரால் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டம். கூட்டத்தை நடத்தியவர்களுள் மு.பொ. வீரன் என்பவரும், டபுள்யூ.பி. வேலாயுதம் என்பவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் மேடைக்கு முன்னர் நின்றிருந்தார்கள். பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு செங்கல் துண்டு, எங்கிருந்தோ வந்து மேடையில் பெரியார் கால்கள் அருகில் விழுந்தது. யாரோ ஒருவன் மறைந்திருந்து அதனை வீசி எறிந்தான். நல்ல வேளை அது பெரியார் மீது படவில்லை. அந்தக் கல் வந்து விழுந்த நேரம்; இடம் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதச்...