ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக
எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜகவால் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அமலாக்கத்துறை- வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகளுக்கும், விசாரிப்புகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டாலோ அல்லது பாஜக ஆதரவாளர்கள் ஆகிவிட்டாலோ அவர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்களும் ஒரு நொடியில் பறந்துவிடும், பிறவிப் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படி பாஜகவின் வாஷிங் மெஷினில் சிக்கி தூய்மையானவர்களின் பட்டியல்.
பாவனா கவாலி :
சிவசேனாவை சேர்ந்த இவர், பொது அறக்கட்டளைக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்ததாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இந்த வழக்கில் சில மாதங்கள் கழித்து இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். 2021, 2022-இல் பாவனாவை விசாரிக்க அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. குற்றப்பத்திரிகையில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால் 2022 ஜூலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார் பாவனா. மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு அமலாக்கத்துறை இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. பாவனாவை விசாரிக்கவும் இல்லை.
ஹசன் முஷ்ரிப் :
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரின் வீடு, மும்பை மற்றும் கோல்காபூரில் உள்ள அலுவலகங்களில் 2023 மார்ச்சில் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஹசன் முஷ்ரின் எந்தெந்த தொழிலில் என்னென்ன முறைகேடு செய்தார் என்றெல்லாம் மராட்டிய பாஜக தலைவர் கிரித் சோமையா மிகப்பெரிய குற்றச்சாட்டு பத்திரமே வாசித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அஜித் பவார் பாஜகவுடன் இணைந்தபோது ஹசன் முஷ்ரிப்பும் அவருடைய அணியில் இணைந்தார். அதன்பிறகு இந்த வழக்கில் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை அமலாக்கத்துறை. அஜித் பவாரும் பாஜகவின் சலவை இயந்திரத்தில் புகுந்து ஏற்கெனவே தன்னை தூய்மையாக்கிக் கொண்டவர். தற்போது இரண்டாவது முறையாக தன்னை தூய்மையாக்கிக் கொண்டதோடு, மேலும் சிலரையும் தூய்மையாக்கி விட்டிருக்கிறார்.
திகம்பர் காமத் :
கோவாவின் முன்னாள் முதல்வரான திகம்பர் காமத்தும், அவரது அமைச்சரவையில் பொதுப்பணிகள் துறை அமைச்சராக இருந்த சர்ச்சில் அலேமாவோவும் லஞ்சம் வாங்கியதாக 2015-இல் விசாரணை தொடங்கப்பட்டது. முதலில் சிபிஐ-யும் பின்னர் அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரித்தன. 14 ஷெல் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கியிருப்பதாக முதல் தகவல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது. 2021-இல் மீண்டும் இந்த வழக்கை வேகப்படுத்தியது அமலாக்கத்துறை. ஆனால் 2022 செப்டம்பரில் திகம்பர் காமத் மேலும் சில எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு இந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.
சி.எம்.ரமேஷ் & ஒய்.எஸ்.சவுத்ரி :
தெலுங்கு தேசம் மாநிலங்களவை எம்.பி.க்களான இருவரும் மற்ற சில தொழிலதிபர்களுடன் சேர்த்து சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் ஆந்திர மல்லையாக்கள் என பாஜக நிர்வாகி நரசிம்ம ராவ் குற்றம்சாட்டியிருந்தார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலங்களவை நெறிமுறைக்குழுவுக்கும் இவர் கடிதம் அனுப்பினார். ஆனால் இவர்கள் இருவரோடு சேர்த்து தெலுங்குதேசம் கட்சியின் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு பாஜகவில் இணைந்தனர். பாஜகவின் வாஷிங் மெஷின் இவர்களையும் தூய்மையானவர்கள் ஆக்கிவிட்டது.
சுவேந்து அதிகாரி :
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவேந்திர அதிகாரிக்கு, நாரதா ஸ்டிங் ஆபரேசன் வழக்கில் 2017ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. பாஜகவினரும் இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். ஆனால் 2020ஆம் ஆண்டில் இவர் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக, நந்திகிராம் தொகுதியில் இவர்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டார், வெற்றியும் பெற்றார். இப்போது இவர்தான் எதிர்க்கட்சித் தலைவர்.
பாபா சித்திக் :
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மகாராஷ்டிராவின் பாந்த்ரா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதற்குமுன்பு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மும்பை வாரிய தலைவராக இருந்தபோது, குடிசைப் பகுதி சீரமைப்பு திட்டத்தில் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரித்தது. கடந்த மாதம் இவர் காங்கிரஸில் இருந்து விலகி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இணைந்த பிறகு விசாரணை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்தால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன் தேதியிட்டு அழிக்கப்படும் என்ற அதிரடி ஆஃபருக்கு, இவர்களைப் போல இன்னும் பலர் இரையாகி இருக்கிறார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஊழல் செய்வது தவறல்ல, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஊழல் செய்வதுதான் தவறு.
பெரியார் முழக்கம் 29022024