இட ஒதுக்கீட்டை பகிர்ந்தளித்தவர் கலைஞர்
55. பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்ற இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத புதுமையான திட்டத்தையும் கொண்டுவந்தார்.
56. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர அமைப்பு முறை என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றினார். மெட்ராஸ் மாநகர் சென்னையாக பெயர் மாற்றப்பட்டதும் அப்போதுதான்.
57. சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு, கிராமங்களில் கான்கிரீட் சாலைகள், புதிய தொழில் கொள்கை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி பேருந்துகள், நீர்நிலைகளை தூர்வாருதல் என தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை பலப்படுத்தும் பல திட்டங்களை செயல்படுத்தினார் கலைஞர்.
58. குமரிக்கடலில் திருவள்ளுவருக்கு 133 அடியில் பிரமாண்ட சிலை, மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டுமானம் போன்றவையும் அந்த சமயத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது.
59. உலகமயமாக்கலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கணினி சார்ந்த படிப்புகளையும், தொழில்களையும் விரிவுபடுத்தினார் கலைஞர். 2000-ம் ஆண்டில் சென்னையில் டைடல் பார்க்கை திறந்துவைத்தார்.
60. திமுக ஆட்சியின் 5 ஆண்டுகாலப் பணிகள், ஜெயலலிதான் முந்தைய ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் மீண்டும் 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக எளிதாக வென்றுவிடும் என்றே கலைஞர் எண்ணியிருந்தார். ஆனால் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரானார்.
61. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கருணாநிதி கைது செய்யப்பட்டார். சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து கலைஞரை போலீசார் தூக்கிச் சென்றனர். அரசியல் ரீதியாக மிகக் கடும் விமர்சனங்களை இது ஏற்படுத்தியது. பழிவாங்கும் இந்த நடவடிக்கையில் வழக்கு விசாரணைக்கு வரவேவில்லை.
62. கலைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. முன்னதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கலைஞரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் நீட்டினார். அநீதி வீழும்; அறம் வெல்லும் என அதில் எழுதினார் கலைஞர். அந்த வாசகம் இன்றளவிலும் பிரபலமானது.
63. 2003-ல் பாஜக கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. பாஜகவிற்கு எதிரான காங்கிரஸ் அணியை பலப்படுத்துவதில் மிக முக்கிய சக்தியாக கலைஞர் விளங்கினார். அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவை ஆளும் வாய்ப்பைப் பெற்றது காங்கிரஸ். 2008 ஈழப்போர் இறுதிக்கட்டம் வரை இந்த கூட்டணி எந்த சிக்கலும் இன்றி தொடர்ந்தது. மீண்டும் 2006-ல் திமுக கூட்டணி வெற்றி பெற்று கலைஞர் முதலமைச்சரானவுடன் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ரேசனில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கினார். கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்தார். சத்துணவில் முட்டை சேர்த்தார்.
64. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டு மலைக் கிராமங்களிலும் தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினார். இத்திட்டத்தால் தமிழ்நாட்டில் மக்கள் செய்திகளை உள்வாங்கும் விகிதம் அதிகரித்திருப்பதாக அப்போது பல புள்ளி விவரங்களும் வெளியாகின.
65. 2006-11 ஆட்சிக்காலத்தில்தான் அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்தையும் கலைஞர் நிறைவேற்றினார். அந்த சட்டத்தின் கீழ்தான் 2022-ம் ஆண்டில் நியமனங்களை பிறப்பித்தார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
66. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்திற்கு வரம்பு, சமச்சீர் கல்வி, நுழைவுத்தேர்வுகள் ரத்து என கல்வி ரீதியாகவும் 2006 முதல் 2011 வரையிலான ஆட்சியில் பல முக்கியமான முடிவுகளை கலைஞர் எடுத்தார். அருந்ததியர்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதும் அப்போதுதான்.
67. 2007-க்கு பிறகு பல்வேறு தனது பொதுவாழ்வில் கண்டிராத பல்வேறு நெருக்கடிகளையும், துன்பியல் சம்பவங்களையும் கலைஞர் எதிர்கொள்ள நேர்ந்தது. ஈழப் போரின் இறுதிகட்டம் உணர்வுப் பூர்வ சிக்கலாக மாறியது. நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அதிருப்திகளை சம்பாதித்துக் கொடுத்தன. ஆயினும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
68. 2009 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நீடிக்கவில்லை. அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு எப்படி 63 இடங்களை கலைஞர் ஒதுக்கினார் என்பது இன்றளவிலும் விமர்சகர்கள் வைக்கும் கேள்வி.
69. கட்சி நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டிய நிலைமை கலைஞருக்கு ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட சட்டப் போரட்டத்தால் 2-ஜி வழக்கில் இருந்து திமுக 2017 டிசம்பரில் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும் அதற்காக பெரிய விலையை கருணாநிதியும், திமுகவும் கொடுக்க நேர்ந்தது.
70. 2011-க்கு பிறகு கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் அவர் பெயரில் அறிக்கையோ, செய்தியோ இல்லாத நாள் இல்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனாலும் மரணப்படுக்கைக்கு செல்லும் வரை அவரின் அரசியல் பணிகள் ஓயவே இல்லை.
71. எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சி, ராஜீவ் படுகொலை, வைகோவின் பிளவு என பலமுறை கலைஞர் சரிவுகளைக் கண்டிருந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல ஒவ்வொருமுறையும் எழுந்துகொண்டே இருந்தார். 2011-க்குப் பிறகு முதுமை அவரை முழுமையாக முடக்கிவிட்டது. 2018 ஆகஸ்ட் 8-ல் தனது 95-வது வயதில் கலைஞர் மறைந்தார்.
72. அண்ணா, பெரியார், ராஜாஜி, காமராசர், எம்ஜிஆர், ஜெயலலிதா வரை கலைஞர் வாழ்ந்த காலத்தில் மறைந்த தலைவர்கள் ஏராளம். அவர்களுக்கு கலைஞர் எழுதிய இரங்கற்பாவும் மிக முக்கியமானது. எல்லோருக்கும் இரங்கற்பா எழுதிய கலைஞர், எனக்கு மட்டும் எழுத காத்திருக்காமல் போய்விட்டாரே கண்ணீர் விட்டார் அன்பழகன்
73. கலைஞரின் இறுதி ஊர்வலகத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். வாழ்நாள் முழுவதும் இடஒதுக்கீட்டு உரிமைகளுக்கு போராடியவர்,சட்டப் போராட்டம் நடத்தியவர், ஒவ்வொரு சமூகத்திற்கும் பார்த்துப் பார்த்து இடஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர். கடைசியில் மெரினாவில் அண்ணாவுக்கு அருகில் அவருக்கான இடத்தையும் அப்படி சட்டப் போராட்டம் நடத்திதான் பெற்றார்.
தொடரும்
பெரியார் முழக்கம் 06072023 இதழ்