ஆர்.எஸ்.எஸ். பிடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தல்
சேலத்தில் ஆளுநருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கழகத் தலைவர் கொளத்தூர்மணி பேசுகையில் குறிப்பிட்டதாவது:
அளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி தனியாக இயங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.மாநில அரசின் அறிவுரையின் படி, ஆலோசனையின் படி தான் நடந்துகொள்ள வேண்டும், ஆனால் இந்த ஆளுநரோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகம் போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களோ அப்படி நடந்துகொள்வதில்லை. அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள்.
வேந்தர் பதவி கூட கர்நாடகாவில் ஆகட்டும், குஜராத்தில் ஆகட்டும் அங்கு வேந்தராக இருப்பது அம்மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் தான்.தமிழ்நாட்டில் மட்டும் தான் ஆளுநர் என்பதாக கடந்த 15 ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்களில், தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழி கொள்கை, ஏற்க மறுக்கிற சமஸ்கிருத்தை சனாதன தர்மம் என்கிற வருணாஸ்ரம தர்மத்தை தொடர்ந்து ஆதரித்து பேசிக்கொண்டிருக்கிறார். அதே போல் இந்த நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களான வள்ளுவர், வள்ளலாரை எல்லாம் இழிவுபடுத்தி ஏதோ இந்துமத சிந்தனையாளர்கள் போல அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி வேண்டுமென்றே சிக்கலை தொடங்கி வைக்க வேண்டும், ஊதிப்பெருக்க வேண்டும் என்று கருதுகிற ஆளுநரை நாம் அனுமதிக்கக் கூடாது, இப்படிப்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கண்டிக்கும் விதமாக கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்த்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.அதே போல் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை, சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதிமுக இயற்றிய சட்டத்தையே கையெழுத்து போடாமல் வைத்திருக்கிற இப்படிப்பட்ட ஆணவப் போக்கை கண்டித்துத் தான் அனைத்து இயக்கங்கள்,கட்சிகளுடன் இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வதற்கு தான் இந்த ஆர்பாட்டம்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கழகத் தலைவர் ஆளுநர் ஆர்..எஸ்.எஸ்.காரர்களை, பிற்போக்குவாதிகளைத்தான் சேலம் பல்கலைக்கழக பதிவாளராக நியமித்துக்கொண்டிருக்கிறார். பெரியசாமி என்ற தகுதியில்லாத தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப் பட்டிருக்கிறார்,பதிவாளராக தொடர்ச்சியாக ஆறாண்டுகள் ஒருவரே பொறுப்பு பதவியாகவே இருக்கிறார், அந்த பொறுப்பிற்கு இன்னும் நியமனம் செய்யவே இல்லை. ஏனென்றால் அவர்களுடைய ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு போக்கை உயர்க்கல்வித்துறை அமைச்சர் அக்கறையோடு பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆட்சிக் குழுவில் ஆறு பேர் அரசியல் பிரதிநிதிகள் இருக்கிறார்கள், அதேபோல் இரண்டு பேர் எம்.பி.சி, எஸ்.சி. எஸ்.டி பிரதிநிதிகள் இருக்கிறார்கள், 21 பேரில் 8 பேர் அரசியல் பிரதிநிதிகள் இருக்கிறார்கள், இன்னும் மூன்று பேர் ஆதரவாக இருந்தால் போதும், எனவே அப்படிப்பட்ட ஆதரவைத் திரட்டி பல்கலைக்கழத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்,
பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டம் தொடங்க கூடாது என்று சொன்ன ஐஐடி இயக்குநர் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார், இப்படிப்பட்ட மனிதர்களை ஊக்குவிப்பதும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.
சனாதன பரப்புரையாளர் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக “ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டமைப்பின்” சார்பில் சேலத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 28.06.2023 அன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்களை காவல்துறை கைது செய்தது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 260 தோழர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
தோழர்கள் அடைக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் ஆளுநரின் அத்துமீறல்களுக்கு எதிரான கூட்டமைப்பில் உள்ள பல்வேறு தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் போக்கு குறித்தும் ஒன்றிய அரசின் தற்போதைய சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளையும், வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பாசிச பாஜகவுக்கு எதிராக திரள வேண்டிய அவசியம் குறித்தும் கூடியிருந்த தோழர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
பெரியார் முழக்கம் 06072023 இதழ்