ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் ‘நீட்’
2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது.
அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த மாணவர் டில்லியின் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்தவர். சாதித்ததாகக் கூறப்படும் அனைவருமே டில்லி, புனே, கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மேற்கொண்ட இந்த ஆய்வுகளில் இருந்து, ‘நீட்’ தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மய்யங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை ‘நீட்’ தேர்வு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது.
மருத்துவக் கல்வி என்பது உயர்ஜாதியினர், பணக்காரர்கள், நகர்ப்புறத்தாருக்கு மட்டுமே உரிமையானது என்பது அம்பலமாகியுள்ளது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவர்கள் NCERT கல்வி மற்றும் பயிற்சிக்கான ஆய்வு கவுன்சில் என்ற ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாட நூல்களை படித்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 22062023 இதழ்