சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!
சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது.
20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மாநாட்டிற்காக தனி நபர் நன்கொடை மற்றும் குழுவாக சென்று நன்கொடை வசூல் செய்வது பற்றியும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
சேலம் மேற்கு மாவட்டத்திற்கு நங்கவள்ளி அன்பு, இராஜேந்திரன் தலைமையில் குழு வாக 15-க்கும் மேற்பட்ட தோழர்களோடும், அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு நங்கவள்ளி கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தோழர்கள் குழுவாகச் சென்று பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் நன்கொடை வசூல் செய்வதாக குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதேபோல தனிநபர் நன்கொடை வசூல் குழு அமைக்கப்பட்டு அதில் மாவட்ட, நகர, கிளைக் கழக, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தனி நபர் நன்கொடை வசூல் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாநில மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
நிறைவாக கழகத் தலைவர் மாநாடு குறித்தும் மாநாட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பாட்டரங்கம் குறித்தும், பேரணி எழுச்சியோடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்றும், மாநாடு நடத்துவதற்கு நிதி முக்கியமென்றும், துண்டறிக்கை மற்றும் சுவரெழுத்துப் பணிகள் மூலம் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்றும் மாநாட்டை நிறைவோடு நடத்தி முடிக்க வேண்டுமென்றும் அதற்கு தோழர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்றும் தமது உரையில் எடுத்துச் சொன்னார்.
நிறைவாக டேவிட் நன்றி கூற கலந்துரை யாடல் கூட்டம் இரவு 8.00 மணிக்கு நிறைவடைந்தது.
கலந்துரையாடல் கூட்டத்தில் மாநாட் டிற்காக ஏற்காடு பகுதியின் சார்பாக அறிவிக் கப்பட்ட ரூ.50,000/- மற்றும் சிந்தாமணியூர் கிளைக் கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.1,00,000/-இல் முதல் தவணையாக
ரூ.55,000/-ம், கொளத்தூர் பகுதியின் சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.50,000த்தில் முதல் தவணையாக ரூ.20,000/- மாநாட்டு பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப் பட்டது.
பெரியார் முழக்கம் 02032023 இதழ்