வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் பெரியார் பேச்சு: மிரண்டது திருவாங்கூர் சமஸ்தானம்

 

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள்  நம்பூதிரிகளின் திமிர்

  • வைக்கத்தில் தீண்டாமையை நம்பூதிரிகளும் நாயர்களும் நியாயப் படுத்தினர். போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் தேவன் நீலகண்டன் நம்பியாத்திரி என்ற நம்பூதிரிப் பார்ப்பனர். காந்தி இவரை சந்தித்துப் பேச விரும்பினார். ‘இண்டம் துருத்திமனை’ என்ற இடத்தில் வாழ்ந்த இந்த நம்பூதிரி ஒரு நிலப்பிரபு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் 48 “பிராமணக்” குடும்பங்கள் இருந்தன.
  • காந்தி வைசியர் என்பதால் இவரை தனது வீட்டுக்குள் விட மறுத்த இவர், தனியாக ஒரு தாழ்வாரத்தை உருவாக்கி காந்தியுடன் பேசினார். அவர் காந்தியுடன் பேசிய கருத்துகள் பச்சையான பார்ப்பன வெறியை வெளிப்படுத்தின.

“முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி நெருங்க முடியாத ஜாதியில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள்; எனவே அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும்.”

“கொள்ளையர்கள், குடிகாரர்களைவிட இவர்களை மோசமாக நடத்த வேண்டும்; இவர்கள் சட்டபடி குற்றவாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்; ஆனால் தீண்டப்படாத வர்களை சட்டம் தண்டிக்காத நிலையில் எங்களிடம் நம்பிக்கையால்தான் தண்டிக்க வேண்டும். எங்களது ஆச்சாரியார்கள் இதைத்தான் எங்களுக்கு கற்பித்திருக்கிறார்கள்.”

“எங்களால் தண்டனை பெறுவதற்காகவே அவர்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

“இவர்கள் கோயில் வீதிகளில் நடக்க நீதிமன்றம் அனுமதித்தால் அந்தக் கோயில்களையே நாங்கள் புறக்கணித்து விடுவோம்”

– என்று பேசினார், அந்த நம்பூதிரி.

(இந்த உரையாடல் முழுவதையும் சுருக்கெழுத்தில் எழுதி பதிவு செய்தவர் கிருகத்துவ அய்யர். இது ஆவணமாக இருக்கிறது. ஆதாரம்: பழ. அதியமான நூல்)

பெரியார் முழக்கம் 06042023 இதழ்

You may also like...