வேள்விகளை வெடி வைத்துப் பொசுக்கியவர்

வேரோடிப் போயிருந்த சனாதனத்தை

வெட்டியதோர் நெடுவாளே ! இந்த நாட்டில்

ஊரோடு கிளிப்பாட்டுப் பாடி டாமல்

உயர்கருத்தைத் தந்தவரே ! தமிழன் ஆட்சித்

தேரோட்டப் பாதைக்குத் தடைநிற் போரின்

திமிர் அடக்கி வந்திட்ட புலியே ! மண்ணில்

ஈரோடு வரலாறு பிறக்கா விட்டால்

எம்வழியை மாற்றுதற்கே யார்பிறப்பார் ?

காக்கையொன்று கரைந்தாலும் அதனைக் கேட்டு

கால்பயணம் மாற்றிடுவார் ! வேலி யோரச்

சீக்காளிக் கழுதையொன்று கதறு மானால்

தெய்வம் வந்து சொன்னதென்று நின்று கேட்பார் !

தேக்குமர இடுக்கினிலே பல்லி ஒன்று

தீனிகண்டு குரல்தந்தால் புத்தி போகும்

போக்கு கெட்ட தமிழர்களை எழுப்பித் தட்டிப்

‘புதுமதி’யை ஊட்டியவர் நீங்கள் தானே !

பெண்ணொருத்தி குளிப்பதனை எட்டிப் பார்த்தால்

பிழைஎன்று சட்டமுள்ள இந்த நாட்டில்

கண்ணெடுத்துப் பார்த்திட்ட தன்றி, அன்னார்

கட்டிவந்த சேலையெல்லாம் திருடிச் சென்ற

வெண்ணெய் வெட்டிக் கண்ணன்

அவன் படத்தைப் போட்டு

வெறும் மேனிக் கன்னியரை எதிரில் காட்டி,

சிண்ணாரம் பேசி வந்த மதக்கூட்டத்தைக்

கிழித்தெறிந்த சீர்திருத்தச் செம்மல் நீங்கள் !

 

நாமத்தை நெற்றியிலே சாத்திவிட்டு

நம்மவர்கள் சொத்தெல்லாம் பறித்து வந்த

சோமாசாஸ் திரிக்கூட்டம் ஒடுங்கி விட்ட

சுடர்க்கதையே உம்மாலே நிகழ்ந்த தன்றோ ?

‘பூமியையே சுருட்டியவன் ஒருவன் என்றால்

புவியுலகம் பழம்பாயா ?’ என்றே கேட்டீர் !

சாமத்துக் கோழிகளின் கூச்சல் ஓட்டச்

சரித்திரமாய் வந்தவரே ! எங்கே போனீர் ?

 

கேள்விகளே அறிவாட்கள் ; இருட்பு லத்தைக்

கிழிக்கின்ற ஈட்டி  என்றார் ‘சாக்ரடீ’ சும்

‘ஆள்வதிலும் பகுத்தறிவுத் திட்டம் தீட்டி

ஆள்வதுதான் ஆட்சி ‘! என்றார் அறிஞர் அண்ணா !

சூள் உரைத்துத் தமிழ்க்குருதி கொதிக்க வைத்துச்

சுடச் சுடவே பாவேந்தர் பாட்டைத் தந்தார் !

வேள்விகளைக் கோத்திரத்துக் குப்பை தன்னை

வெடிவைத்துப் பொசுக்கியவர் நீங்கள் தானே !

 

திருப்பதியின் உண்டியலில் இலட்சம் இலட்சம்

தினம்குவியும் சேதியினைக் கேட்கும் போதில்,

‘உருப்படுமா இந்நாடும்?’ என்றே கேட்டீர் !

‘உயிர்தருவோன் உயிர்ப்பலியா கேட்பான் ?’ என்றீர்!

கருப்பு மயிர் கடவுளுக்கே இலஞ்சம் தந்து

கடாட்சத்தைப் பெற நினைக்கும் மடையர் கூட்டம்

செருப்பாகத் தேய்கிறதே அய்யா ! உங்கள்

செயல்முடிக்கும் முன்னர் ஏன் பறந்தே போனீர் ?

கவிஞர் கா.வேழவேந்தன்

பெரியார் முழக்கம் 22122022 இதழ்

You may also like...