G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை
G-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் இந்தியா பெருமை கொள்ள எதுவும் இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒவ்வொன்றுக்கும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 19ஆவது சுற்றில் தலைமைப் பதவி மோடிக்கு கிடைத்திருக்கிறது. அந்த முறையில் தற்போது இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி இந்தியா முழுவதும் 200 இடங்களில் இது தொடர்பான கூட்டங்களை நடத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு முநலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டிருக்கிறார். மிகவும் பெருந்தன்மையோடு இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரும் என்று அறிவித்திருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு ‘ளுவயவநளஅயn’ என்ற முறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற ஒரு சிறப்பான முடிவு.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிற கருத்தையும் நாம் புறம் தள்ளி விட முடியாது. ‘மோடி ஒரு உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் எனும் ஆய்வுப் பொருளை சுற்றி மட்டுமே தன்னுடைய உள்நாட்டு அரசியல் பிரச்சாரத்தை அறிவித்திருக்கிறார். G-20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை மேம்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்தை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிற அதே நேரத்தில், ஒன்றிய அரசாங்கத்தினுடைய கருத்து என்பது அனைவரும் ஒரே குடும்பம், அனைவரும் வசுதைய்வக் குடும்பகம் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது.
இந்த ‘வசுதைய்வக் குடும்பகம்’ என்பது ஒற்றைத் தன்மையைத் திணிப்பதாகும். பன்முகத் தன்மையை மறுக்கின்ற ஒன்றாகும். சமூகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாட்டினுடைய அடிப்படை நாதம், அதற்கு மாறாக ஒற்றை ஆட்சி, ஒற்றைக் குடும்பம் என்பது நேர் முரணான ஒரு கருத்தாக்கம். இந்த முரண்பாட்டை மோடி ஆட்சி எப்படி கையாளப்போகிறது ?
குறைந்தபட்சம் G-20 நாடுகளுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற சொன்னால், இந்த G-20 மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் அனைத்துப் பிரிவினரையும் பன்முகத் தன்மையையும் அங்கீகரிக்கிற ஒரு கொள்கையை மோடி ஆட்சி கைக்கொள்ள வேண்டும்.
ஒற்றை ஆட்சி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை நாடு, ஒற்றை ரேசன் கார்டு, ஒற்றை கல்விமுறை என்று அனைத்தையும் ஒற்றைத் தன்மை ஆக்குகின்ற சர்வாதிகாரப் போக்கை கை விட்டு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிற முறை என்பதை மோடி புரிந்து கொண்டு செயல்பட்டால் இந்த மாநாட்டிற்கு மட்டுமல்ல; அவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
பெரியார் முழக்கம் 15122022 இதழ்