கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.07.2022 வியாழக்கிழமை சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள வனவாசியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது.
முதல் நிகழ்வாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி வனவாசியில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
பொதுக் கூட்ட ஆரம்பமாக மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினர் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து காவை இளவரசன் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்வை மக்கள் மத்தியில் மிக எளிமையாக செய்து காட்டினார்.அது கூடியிருந்த மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்து வனவாசி பகுதி நகர செயலாளர் பழ. உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை உரை நிகழ்த்தினார்.
திவிக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர பொருளாளர் கதிர்வேல், பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
திராவிட முன்னேற்ற கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் கோனூர் வைரமணி, சி.பி.ஐ ஒன்றிய செயலாளர் பழ. ஜீவானந்தம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கோனூர் வைரமணி தனது உரையில் “பெரியார் கொள்கை இன்றும் ஏன் தேவைப்படுகிறது” என்பதைப் பற்றியும், பழ ஜீவானந்தம் “பி.ஜே.பி அரசின் அவல நிலைகளைப் பற்றியும்” விளக்கி உரை நிகழ்த்தினர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது நிறைவுரையில் “பெரியார் இயக்கத்தின் தேவை இன்றும் ஏன் தேவைப்படுகிறது, புராணக் கதைகளை சொல்லி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள், வேத கடவுள்களை இப்போது யாரும் வழிபடுவதில்லை என்றும், சாதி இழிவுகளைப் பற்றியும், கல்வி நிலையில் நாம் இப்போது எப்படி உள்ளோம் என்பது பற்றியும், இடஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் நாம் பெற்ற உரிமைகள் நீதிக் கட்சியின் மூலம் நாம் கிடைக்கப் பெற்றோம் என்பதையும், கிடைத்த உரிமைகளை பாதுகாக்க நாம் போராடும் நிலையில் இருக்கிறோம்” என தனது உரையில் கூறினார்.
நிறைவாக நகரத் தலைவர் ப.செந்தில்குமார் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இரவு 10.00 மணி அளவில் நிறைவடைந்தது.
பொதுக் கூட்டத்தில் சேலம், இளம்பிள்ளை , தாரமங்கலம், குமாரபாளையம், மேச்சேரி, தாரமங்கலம், நங்கவள்ளி, மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர் ஆகிய பகுதியில் இருந்து பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 04082022 இதழ்