“நடராஜ மகாத்மியம்” நூல் எழுதியவர் மீது பாஜக புகார் அளிக்குமா? தமிழ்நாடு பாஜவினருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

U2Brutus வலைக்காட்சியில் சிதம்பரம் நடராஜன் சிலை குறித்து பேசியதற்காக இந்துமதக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியினர் அறிக்கை, புகார் என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

‘நடராஜ மகாத்மியம்’ என்ற நூலில் எழுதப்பட்டு இருக்கிற செய்திகளை மேற்கோள்காட்டி “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலின்  முதல் பதிப்பில் 190, 191, 192, 193 ஆகிய பக்கங்களில் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதி உள்ளதை எடுத்துப் பேசியிருக்கிறார். அதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும்,  எச். ராஜா என்பவரும் உடனடியாக அந்த வலைக்காட்சி யில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற அதி புத்திசாலித்தனமான கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

முறையான அரசியல் செய்வதற்கு சரியான காரணங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால், கடலில் தத்தளிக்கும் ஒருவர் துரும்பு கிடைத்தாலும் பிடித்துக்கொண்டு தப்பித்து விடலாம் என்று நம்புவதைப் போல,  இந்த செய்தியை எடுத்து ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே அந்தக் கட்சியின் மிக மிக புத்திசாலிகளான உறுப்பினர்கள் புகார் மனு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் சொல்ல விரும்புவது:

ஒரு நூலில் உள்ள செய்தியை  எடுத்துச் சொன்னதற்காக ஒருவரை கைது செய்ய வேண்டும்; தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றால், எழுதியவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்?  அப்படிப்பட்ட சங்கதிகளை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிற அந்த ‘நடராஜ மகாத்மியம்’ என்ற நூலினை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அவர்கள் கருத்து  எதையும் சொல்லவில்லை.

உண்மையிலேயே இதனால் அவர்களுடைய மென்மையான மனங்கள் புண்பட்டு இருக்குமேயானால் …. இப்படிப்பட்ட ஆபாச செய்தியைத் தாங்கி இருக்கிற ‘நடராஜ மகாத்மியம்’ என்ற நூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், அதனை அச்சிட்டு வெளியிட்டு இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அந்த நூலின் படிகள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்ற வேண்டும், பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்தான் அவர்கள் அவர்கள் வைத்திருக்க வேண்டும்!

சரி, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

இனிமேலாவது இப்படிப்பட்ட சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று

திரு. அண்ணாமலை அவர்களுக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும் எடு(இடி)த்துரைக்க விரும்புகிறேன்.

 

பெரியார் முழக்கம் 05052022 இதழ்

You may also like...