தலையங்கம் அமித்ஷாவின் ‘அடாவடி’
மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர, இனி நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற முடிவை ஒன்றிய ஆட்சி எடுத்திருக்கிறது. இதற்குப் பெயர் CUTE என்பதாகும். இது விளிம்பு நிலை மக்களுக்கு எதிரானது, கோச்சிங் சென்டருக்குத் தான் வழி வகுக்கும். இது இரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 09.04.2022 அன்று ஒரு தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார். பாஜக என்ற கட்சியைத் தவிர, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து பேசியிருப்பது, தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறது. உண்மை யிலேயே இது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
பாஜகவினுடைய இந்த இந்தி ஆதரவு, நீட் ஆதரவு நடவடிக்கைகளை தமிழ் மண் ஒருபோதும் ஏற்காது அவர்கள் சட்டமன்றத்தில் நடந்ததைப்போல தனிமைப்பட்டு நிற்கப் போகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நெருப்பை கொளுத்திப் போட்டு இருக்கிறார். “இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும். ஆங்கிலத்தை அலுவல் மொழி நிலையிலிருந்து படிப்படியாக ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது கடும் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் அலுவல் மொழி தொடர்பான 17ஆவது பகுதி இயற்றப்பட்ட காலத்திலிருந்தே இந்த விவாதங்கள் துவங்கி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாட மொழிகளாக்கும் முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது என்பது வரலாறு. பிறகு, நேரு தென்னாட்டு மக்களுக்கு ஒரு உறுதிமொழியை கொடுத்தார். ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்பட மாட்டாது. ஆங்கிலமே நீடிக்கும்’ என்று கூறினார்.
இப்போது இந்தி மொழியை ஒன்றிய ஆட்சி மீண்டும் கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறது. அலுவல் மொழியாக மட்டுமல்ல, தொடர்பு மொழியாகவும் இந்தி இருக்க வேண்டும் என்று சொல்லுகிற நிலைக்கு அது வந்துவிட்டது. கொரோணா காலத்தில் கூட இந்தியை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று பல சுற்றறிக்கைகளை ஒன்றிய ஆட்சி அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால், கொரோனா நோய் தீர்ப்பதில் மாநிலங்கள் அதிகம் கவனம் செலுத்தியதால், இந்தப் பிரச்சனை கவனத்திற்கு வராமலே போய்விட்டது.
ஆங்கிலம் வசதியாக இருக்கிறது; தேவையாக இருக்கிறது என்று ஒருவர் முடிவு செய்வதால் அதில் தலையிட அரசுக்கு உரிமையில்லை. ஆங்கிலம் அன்னிய மொழி என்று அமித்ஷா கூறுவதிலும் அர்த்தமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு சமமாக இந்தியாவில் ஆங்கிலம் பயன்பாட்டில் இருக்கிறது என்பது உண்மை. சொல்லப் போனால் ‘சாகித்ய அகாதமி’ என்ற மத்திய பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பு ஆங்கிலத்தையும் இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளதோடு சிறந்த ஆங்கில நூல்களுக்கு விருது களையும் வழங்கி வருகிறது. உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர், இந்தக் குறைந்த புரிதல்கூட இல்லாமல் பேசுவதற்குக் காரணம் ‘இந்துத்துவா’ என்ற மதவெறிப் பார்வை தான். பிறப்பால் ஒரு குஜராத்தியாக அவர் இருந்தும் இந்தியைத் தூக்கிப் பிடிப்பது சமஸ்கிருதம் என்ற பார்ப்பனியப் பண்பாட்டுக்கு மிக நெருக்கமாக இருப்பது இந்தி என்பதால் தான். சமஸ்கிருதமே இந்த நாட்டின் தேசிய மொழியாக வேண்டும் என்றும் அந்தக் காலம் வரும்வரை, இந்தி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை. ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர் இதை எழுத்துப்பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார்.
இதிலிருந்து, இந்தியாவை தென்னாடு, வடநாடு என்று பிரிக்கிற முயற்சியிலேயே ஒன்றிய ஆட்சி இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் தான் இந்த நாட்டின் பிரிவினை சக்திகள். இந்தியா இந்துக்கள் நாடு! இது இந்து மக்கள் அதிகம் வாழுகிற நாடு. என்று பேசிக் கொண்டிருக்கிற சங்பரிவாரங்கள் ஆங்கிலத்தை எதிர்க்கின்ற இந்துக்கள் தான் உண்மையான இந்துக்கள், ஆங்கிலத்தை ஆதரித்து, மாநில மொழியை ஆதரிப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல. என்று மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். ஏற்கனவே ஜாதியின் அடிப்படையில் இந்துக்கள் பிளவுபட்டு அது முரண்பாடுகளாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
ஜாதி அடிப்படையிலான பிளவு; மொழி அடிப்படையிலான பிளவு; இப்போது மாநிலங்களுக்கு இடையே காட்டப்படுகிற பாகுபாடுகளுக்கும் அடிப்படையான பிளவாக மாறி வருகிறது. இந்து என்ற ஒற்றைச் சொல்லால் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியாது, ஜாதியால், மொழியால், மாநில உரிமைப் பறிப்பால் பிரித்துக் கொண்டே போனார்கள். நாங்கள் இந்தியாவில் ஏன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மாநிலங்களின் கேள்வி கேட்கும் நிலைமைக்கு ஒன்றிய பாஜக இழுத்துச் சென்று கொண்டே இருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் மாநில ‘இந்து’க்கள் என்றால் அவர்களுக்கு தாராள உதவி; பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடக்கும் ‘இந்துக்கள்’ என்றால் புறக்கணிப்பு; இதுவே இந்து பார்ப்பனிய பண்பு!
பெரியார் முழக்கம் 14042022 இதழ்