‘இந்து’ ஏட்டின் கட்டுரை கடவுள்களும் காம்ரேட்களும்
இந்து கோவில் திருவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கத்தை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் இனி அத்தகைய விழாக்களில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சி.பி.அய்.எம் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறினார். திராவிடர் விடுதலைக் கழகமும், திராவிடர் கழகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரினர். நோக்கம் சிறந்தது என்றாலும் இந்த செயல் மார்க்சிய தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது என்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டியதோடு, இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வலிமை சேர்க்கும் என்று கருத்து தெரிவித்தார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டிற்குப் பிறகு செய்தி யாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ‘கோவில் வழிபாடு, பூஜை, சடங்குகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரடியாக பங்கேற்க மாட்டார்கள்’ என்றும், “கட்சியினுடைய ஆதரவாளர்கள் கோவில் நிர்வாகங்களில் பங்கேற்று, நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளில் மதச்சார்பின்மை கொள்கையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்படும்” என்றும், ஏற்கெனவே அளித்த பேட்டியிலிருந்து சற்று விலகி விளக்கம் அளித்தார் தோழர் பாலகிருஷ்ணன். மாநாட்டில் தீர்மானங்களாக இது குறித்து ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து இந்து ஆங்கில நாளேட்டில், (ஏப்ரல் 04,2022 ) அதன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பி.கோலப்பன், ‘கடவுள்களும் காம்ரேட்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உயர்ஜாதிக்காரர்களால் கண்டுகொள்ளப்படாத சிறு தெய்வங்களை உயர்த்திப்பிடித்து அதன் வழியாக அம்மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு வலிமையான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டதை கோலப்பன் சுட்டிக்காட்டியிருக்கிறார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சண்முகம் இது குறித்து அளித்த பேட்டியையும் அந்தக் கட்டுரை பதிவு செய்து இருக்கிறது. “தத்துவத்தில் நாங்கள் மாறவில்லை. கேரளாவைப் போல் கோவில் நிர்வாகத்தில் பங்கு பெறலாமா? என்று யோசிக்கிறோம். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையில் மார்க்சிஸ்டுகள் நேரடியாகவே பங்கேற்று வருகிறார்கள். இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ள இந்த செயல் உக்திகளை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாமா என்று பரிசீலிக்கிறோம்” என்று கூறுகிறார் தோழர் சண்முகம்.
திராவிடர் இயக்கங்களைப் போல் இந்துக்களையும், இந்து மதத்தையும் புண்படுத்துகிறவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல என்று மக்களிடம் இந்த நடவடிக்கைகளால் புரிய வைக்க முடியும் என்று கம்யூனிஸ்டுகள் நம்புவதாகத் தெரிகிறது. கம்யூனிஸ்டுகளுக்கு இத்தகைய சமரசங்கள் தேவையில்லை.
திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிபிஅய்எம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார். “நீண்ட காலமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் கடவுள், மதத்தோடு நெருக்கமாக இருந்து வருகிறது. மதம் மட்டுமே அதன் அரசில் கொள்கையாகவும் வைத்திருக்கிறது. கடவுள், மதத்தை தன் வசமாக கொண் டிருக்கிறது. இதன் வழியாக ஜாதி அமைப்பை காப்பாற்று வதோடு, பகுத்தறிவிற்கு எதிரான கருத்துக்களையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் இவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. பயன் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்குத் தான் போய்ச் சேரும். அது மட்டுமின்றி, “மார்க்சிஸ்டுகள் இவ்வளவு காலமாக நாங்கள் பேசிய கொள்கைக்கு திரும்பிவிட்டார்கள். அதில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்” என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக வினர் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக பேசத் தொடங்கி விடுவார்கள். எனவே மார்க்சிஸ்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் விடுதலை இராசேந்திரன்.
‘கோவில் நடவடிக்கைகளில் பங்கெடுத்து, அதனை ஆர்.எஸ்.எஸ், பாஜக விடமிருந்து விலக்கி தன் வயமாக்கிக் கொள்ளும் வலிமை தமிழ்நாடு மார்க்சிஸ்டுகளுக்கு இருக்கிறதா ? என்பது இனிமேல் தான் தெரியும்’ என்று கட்டுரையை முடிக்கிறார் கோலப்பன்.
பெரியார் முழக்கம் 07042022 இதழ்