‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தை அரசு மாற்றியது பாராட்டுக்குரியது

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக பெண்களின் உயர் கல்விக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே முற்போக்கான வரவேற்க வேண்டிய ஒரு திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “மூவலூர் இராமாமிர்தம்” பெயரால் இதுவரை செயல்பட்டு வந்த திட்டம். 2011ஆம் ஆண்டுவரை, பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு திருமணத்தின் போது 50,000, மற்ற பெண்களுக்கு 25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இது பெண்களின் கல்வி முன்னேற்றம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம்.

2011 இல் ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு கல்விக்கான இந்தத் திட்டத்தை, திருமணத்துக்கான திட்டமாக மாற்றி இந்த நிதி உதவியோடு 4 கிராம் தங்கத்தை தாலிக்காக வழங்குவது என்ற ஒரு திட்டத்தை பெண்களை கவருவதற்காக கொண்டு வந்தார். பிறகு அதை 8 கிராமாகவும் உயர்த்தி அறிவித்தார்.

பெண்களின் உயர்கல்வி முக்கியமா? அல்லது 12 ஆம் வகுப்பு படித்த பெண்களை திருமண வாழ்க்கைக்கு கொண்டு போவதை அரசு ஊக்குவிப்பது முக்கியமா? இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுகிற போது, பெண் உரிமையில், பெண் முன்னேற்றத்தில் கவலை கொள்பவர் எவரும் திருமணச் சந்தையில் தள்ளிவிடுவதைவிட, அவர்கள் உயர்கல்வி பெற்று முன்னேறுவதையே விரும்புவர்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, திருமணத்துக்கு தாலி வழங்கும் திட்டத்தின் வழியாக குழந்தைத் திருமணங்கள் குறையும், வரதட்சணை வாங்குவது குறையும் என்றெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டது முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

திருமணம் என்ற ஒரு நிகழ்ச்சிக்காக தாலிக்கு தங்கம் வழங்குவதை விட பெண்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டமாக மாதம்தோறும் அவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கி அவர்களை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் சமூக மாற்றத்திற்கு சரியான முற்போக்குப் பார்வை. இதில் முற்போக்கு பேசுகிற, இடதுசாரி அமைப்புகள் கூட தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும்; அத்திட்டத்தை நிறுத்தக்கூடாது என்று பேசுவது தான் நமக்கு வியப்பாக இருக்கிறது. தாலிக்கு தங்கம் வழங்குவது கூட ஒரு மதம் சார்ந்த நடவடிக்கை தான். தாலியை பெண்ணடிமையின் சின்னம் என்றே பல படித்த முற்போக்குச் சிந்தனை கொண்ட இளம்பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

நிச்சயமாக தமிழ்நாடு அரசினுடைய இந்த திட்டம் மிகச் சரியான திட்டம். பெண் உரிமையில், பெண் விடுதலையில், பெண் கல்வியில் நம்பிக்கையுள்ள அனைவரும், தாலி கட்டிக் கொண்டு 12 ஆம் வகுப்பிலேயே திருமண வாழ்வில் நுழைவதை விட அந்தப் பெண்கள் மேலும் மேலும் உயர்கல்வி பெற்று அந்த ஊக்கத் தொகையை பெறுவதே முக்கியம்.

 

பெரியார் முழக்கம் 24032022 இதழ்

You may also like...