தலையங்கம் அறநிலையத் துறையில் தடுமாற்றம்
சிவன் கடவுளுக்காக இரவு முழுதும் கண் விழிக்கும் ‘மகா சிவராத்திரி’ என்ற இந்துமதம் தொடர்பான ஒரு சடங்கை அறநிலையத் துறை மக்கள் விழாவாக மாற்றி ஆன்மீகப் பிரச்சாரங்கள் கலை நிகழ்வுகள் நிகழ்த்தி விடிய விடிய நடத்தப் போவதாக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அறநிலையத் துறையின் வேலை, கோயில் பாதுகாப்பு மற்றும் கோயில் குடமுழுக்கு பூஜை சடங்குகளை நடத்துவதற்கு உதவுதல் தானே தவிர, மதத்தை மக்களிடம் பரப்புரை செய்வது அல்ல என்ற முதல் எதிர்ப்புக் குரலை திராவிடர் விடுதலைக் கழகம் எழுப்பியது. முகநூல்களில் கருத்துக்கு வலிமையான ஆதரவுகள் வெளிப்பட்டன. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை ‘ஆன்மீக சுற்றுலா மய்யமாக’ மாற்றப் போவதாக தொகுதி சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் தேர்தல் பரப்புரையில் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் அரங்கேற்றப்படவிருந்தது.
தூய்மை நகரம், தொற்று நோய் இல்லாத நகரம், குற்றங்கள் குறைந்த நகரம் என்ற அறிவிப்புகளில் நியாயம் இருக்கிறது. ‘ஆன்மீக பூமியாக’ மயிலாப்பூர் எப்படியாக முடியும்? அங்கே வேத குலத்தில் பிறந்த ‘பிராமணர்கள்’ அதிகாரச் செல்வாக்குடன் காலம் காலமாக வாழ்வதாலேயே ஆன்மீக பூமியாகிவிட முடியுமா? இராயபுரம், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை ஆன்மீக பகுதிகள் ஆக தகுதியற்றவையா? என்ற கேள்விகளை எழுப்பினோம். அறநிலையத் துறை வரலாற்றிலேயே பொதுவெளியில் மக்களைத் திரட்டி ஆன்மீகப் பரப்புரைகளோடு ‘சிவராத்திரி’ கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை என்று அமைச்சர் சேகர் பாபு பெருமையுடன் அறிவித்தார். வரலாற்றில் இல்லாத அறநிலையத் துறை செய்யாத ஒன்றை ஏன் இப்போது செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இப்போது தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘திராவிடன் மாடல்’ ஆட்சி மக்களைத் தேடிச் சென்று கல்வி, சுகாதாரம், நிவாரணத் திட்டங்களை வழங்கி வருகிறது. மக்களைத் தேடிச் சென்று, மதத்தைப் பரப்புவது ‘திராவிடன் மாடல்’ அல்ல; அது ‘சனாதன மாடல்’ என்பதையும் எடுத்துக் காட்டினோம். தி.மு.க. பெரியார் இயக்கமாக செயல்பட வேண்டும் என்றுகூட வலியுறுத்தவில்லை. அது அ.இ.அ.தி.மு.க.வாக மாறாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முகநூலில் மிகச் சரியாக சிலர் சுட்டிக்காட்டினார்கள்.
இவ்வளவுக்குப் பிறகு அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் மகாசிவராத்திரி கொண்டாடும் கோயில்களில் மட்டும் நம்பிக்கையோடு வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆணையர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். கோயிலுக்கு வெளியே மக்களைத் திரட்டி, மக்கள் விழாக்களாக நடத்தும் அமைச்சரின் அறிவிப்பை அறநிலையத் துறை ஏற்கவில்லை என்பதை சுற்றறிக்கை உள்ளடக்கம் தெளிவுபடுத்தியது.
- சிவ வழிபாட்டுக்குக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் மகிழும்படி கலை, ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- பக்தர்கள் சிரமமின்றி ‘தரிசனம்’ செய்வதற்கு உரிய வசதிகள், மருத்துவ உதவிகள், கழிவறை வசதிகளை செய்து தர வேண்டும்.
- பக்தி சொற்பொழிவு, தமிழ் பக்தி இசை நாட்டிய நாடகம், கிராமிய பக்தி இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அந்தந்த திருக்கோயில்களில் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் நடத்த வேண்டும்.
- கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் பண்பாட்டுத் துறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
– என்று ஆணையர் சுற்றறிக்கை அறிவுறுத்தியுள்ளது. இவை எல்லாம் இது காலம் வரை அறநிலையத் துறை ‘மகாசிவராத்திரி’யில் அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்து வந்த ஏற்பாடுகள்தான், அறநிலையத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத மக்களைத் திரட்டி பக்தி ஆன்மீகத்தை அமைச்சரின் கூற்றுப்படி பரப்புபவை அல்ல.
அறநிலையத் துறை அமைச்சர் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் எப்படி நடக்கும் என்று ஏற்கனவே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்ட பிறகு, அதே பிரச்சினை குறித்து அறநிலையத் துறை ஆணையர் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது என்பதிலிருந்தே அமைச்சரின் மதப் பரப்புரை கருத்துகள் அறநிலையத் துறைக்கு ஏற்புடையதல்ல என்ற முடிவுக்கு அரசு வந்திருப்பதாகவே நாம் புரிந்து கொண்டோம். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. மயிலாப்பூரில், அதிகாரிகள், அமைச்சர்கள் திட்டமிட்டபடி கோயிலுக்கு சொந்தமான பொது இடத்தில் விடிய விடிய விழா கொண்டாட்டம் அதிகாரிகள், அமைச்சர் பங்கேற்புடன் நடந்து முடிந்திருக்கிறது. இது மக்கள் மீதுள்ள கவலையால் நாம் வெளிப்படுத்துகிற கருத்தே தவிர, திணிப்பு அல்ல.
பா.ஜ.க.வும் இந்து அமைப்புகளும் மகாசிவராத்திரியைப் பயன்படுத்தி மதப் பிரச்சாரங்களை இரவு முழுதும் பல்வேறு வடிவங்களில் நடத்துகிறார்கள். அது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற நிலையில் அரசு தடுத்துவிட முடியாது. கோயில் சடங்கு, கோயில் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புகளுக்கான அற நிலையத் துறை அதற்கான எல்லைகளை மீறக் கூடாது என்பதே நமது எதிர்ப்பின் நோக்கம். ஒரு கருத்து சிலரால் முன் வைக்கப்படுகிறது.
மக்களிடம் உள்ள நம்பிக்கைகளை ஆட்சிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக அடையாளங்களைக்கூட விட்டு தரலாம் என்கிறார்கள் இந்த அணுகுமுறை ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பெரியார் கடவுள் மதங்களை கட்டுடைத்து அந்த நம்பிக்கைகளின் ‘கண்மூடித்தனமான உறுதி’களைத் தளர்த்தி – இறுக்கத்தை – நெகிழ்ச்சியாக்கினார். முழுமையாகக் கடவுள் மத நம்பிக்கைகளை பெரியார் இயக்கம் ஒழித்து விட்டதா என்ற கேள்வி அபத்தமானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் நம்பிக்கைகளை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியாது. அதன் இறுக்கத்தைப் பெரியார் தளர்த்தியதால்தான் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கடவுள்களிடமும் மதநம்பிக்கை சடங்குகளிலும் எதிர்பார்க்காமல் ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளனர். இப்போது மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் வீதிகளில் நடக்கிறதே தவிர, கோயில்களுக்குள் கடவுள் முன் ‘பிரார்த்தனை’களாக நடப்பது இல்லை; மக்களிடம் மெல்ல மெல்ல உருவாகி வரும் சிந்தனை மாற்றங்களை முடக்கி மீண்டும் அரசுகளே மதத்தின் பாதைக்கு மக்களை இழுத்துச் செல்வது மக்களை வஞ்சிக்கும் மலிவு அரசியலே ஆகும். தமிழ்நாட்டில் மத உணர்வுகள் மேலும் மேலும் தூண்டி விடப்படுமேயானால் அதற்காகவே காத்திருக்கும் மதவாத அரசியல் சக்திகளின் வளர்ச்சிக்கே அது பாதையமைத்து மக்களை தயார் செய்வதற்கு துணை நின்று மதவாத அரசியல் நுழைவை எளிமையாக்கி விடும் என்பதே நமது கருத்து. பெரும் பான்மையாக இருக்கும் மக்கள் ‘இந்து’ அடையாளத்துக்குள் இருந்தாலும் நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் சமூக நீதியையும் வாழ்வுரிமையையும் சுயமரியாதையையும் தாங்கள் நம்பும் மதத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் பலி கொடுக்கத் தயாராக இல்லை.
கடவுள் மதப் பிடிகளின் வலிமையான இறுக்கத்தை தமிழகத்தில் தளரச் செய்து அதன் இணைப்புச் சங்கிலிகளின் தொடர் துண்டிக்கப்பட்டதே தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு அடிக்கல் அமைத்துத் தந்திருக்கிறது. வடமாநிலங்களில் இப்போதும் மதத்துக் குள்ளேயே கடவுள் நம்பிக்கைக்குள்ளேயே தங்கள் தொலைந்து போன வாழ்க்கையைத்தேடிக் கொண்டிருக்கும் மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.
எனவே எதிர்காலத்தில் இந்து அறநிலையத்துறை செயல்பாடுகள் அதன் எல்லைகளுக்குள்ளே நிற்க வேண்டும் என்ற எச்சரிக்கையோடு செயல்படுவதற்கு இந்த எதிர்ப்புகள் நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்