‘சமூக நீதிக் கூட்டமைப்பு’க் காலத்தின் கட்டாயம்
தமிழ்நாடு முதலமைச்சர் அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்களை உள்ளடக்கி இந்த அமைப்பு உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, சட்டப் போராட்டம் நடத்தி இந்திய ஒன்றிய அளவில் 4000 இடங்கள் கிடைப்பதற்கு கதவுகளை திறந்து விட்டது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் தான்.
இதை ஆந்திரா, மகராஷ்டிரா, பீகார், உ.பி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த சமூக நீதித் தலைவர்கள் காணொலி வழியாக கடந்த 26.01.2022 அன்று நடந்த, மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும்
சமூக நீதி இயக்கத்துக்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டம் கருத்தரங்கில் பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள்.
இந்தியா என்பது தற்போது ஒற்றை ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்துக்களின் நாடாக மாற்றவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குடியரசு நாள் அணிவகுப்பில் வந்த ஊர்திகளை பார்த்தாலே இந்தியா என்பது இந்துக்களின் நாடு தான் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மோடி ஆட்சி பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதற்கு மாற்று சமூக நீதிக்கான களம் ஒன்று மட்டும் தான். சமூக நீதியும், மாநில உரிமையும் இணைத்து மக்கள் கருத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டியதன் அடிப்படையில் ஒற்றை ஆட்சியை நோக்கி பயணிக்கின்ற மதவாத ஆட்சிகளின் சக்திகளை நிச்சயமாக நாம் முறியடிக்க முடியும். அந்த சரியான திசையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் இறங்கியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஏற்கெனவே மாநில கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் அதிகாரங்களில் இருந்தாலும் கூட அவர்களுக்கு இப்படி ஒரு சிந்தனை உருவாகவில்லை. காரணம், தமிழ்நாடு மட்டும் தான் சமூகநீதி மண்ணாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
பெரியார் முழக்கம் 03022022 இதழ்