நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் டி.எஸ். மணி. இவர் சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர்.  இவரது நிலத்தில்தான் 1984-ல் எல்.டி.டி.ஈ யினருக்குப் போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மலைப்பகுதியும் – பச்சைப்பாளி காட்டுப்பகுதியும் கலந்த அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் ரகசியமாகப் பயிற்சி பெற்ற நாட்களை பிரபாகரன் மறந்ததில்லை . பிற்பாடு மரணமடைந்த லெப். கர்னல் பொன்னம்மான், புலேந்திரன் மற்றும்  அருணா இந்த முகாமில் பயிற்சியாளர்களாக இருந்தனர். டி.எஸ். மணிக்குச் சொந்தமான இந்த

இடத்தை அன்று தேர்ந்தெடுத்து, பயிற்சியை முறைப்படி செயல்படுத்திக் கண்காணித்தவர் மாத்தையா!

இந்த முறையில் டி.எஸ். மணி எப்போதும் பிரபாகரனுக்கு நெருங்கியவர். பிரபாகரனின் அழைப்பின் பேரில், டி.எஸ். மணி சமீபத்தில் ஈழம் சென்றார். பிரபாகரனுடன் நடுக்காட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் திரும்பியிருக்கிறார். டி.எஸ். மணி தன் அனுபவத்தைக் கூறுகிறார்;

“1989 டிசம்பர் பத்தாம் தேதி நான் புறப்பட்டு, பதினோராம் தேதி ஈழம் அடைந்தேன். பன்னிரண்டாம் தேதி மாலை பிரபாகரன் இருக்கும் இடத்துக்கு , என்னைக் கொண்டுபோய் சேர்த்தனர் விடுதலைப்புலிகள். நான் சென்ற பாதையையோ, பிரபாகரனை எங்கே சந்தித்தேன் என்பதையோ குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பிரபாகரனுடன் பத்து நாட்கள்  தங்கியிருந்தேன். டிசம்பர் இருபத்துநாலாம் தேதி அங்கிருந்து புறப்பட்டு இருபத்தைந்தாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தேன்.

பிரபாகரனை அடர்த்தியான நடுக்காட்டில் சந்தித்தேன். ஐம்பது அடி தூரத்தில் யார் வருகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்கு அடர்த்தியான மரங்களும், புதர்களும் நிறைந்த பயங்கரக் காடு. துணி துவைத்துப் போட்டால், காய்வதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது!

‘பிரபாகரனைச் சந்திக்க இருபது கிலோமீட்டர் காட்டுக்குள் நடந்து சென்றேன். வழியெங்கும் விடுதலைப்புலிகளின் பாசறைகள் நிறைய இருந்தன! ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். பயிற்சி இல்லாத முகாம்களில் ஏராளமான இளைஞர்கள்’ ஆயுதம் தாங்கி நிற்பதைக் கண்டேன்.

பாசறைகளில் நிறைய ஆயுதங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்தன. இவை மற்ற இயக்கத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் என்பதை அறிந்தேன்.

பிரபாகரனைச் சந்தித்தபோது உணர்ச்சிவயப்பட்டுக் கட்டியணைத்தேன். எப்படி எல்லாம் அவரைப் பற்றிய செய்திகள்! ‘வதந்திகளுக்கு யார் என்ன செய்ய  முடியும்? என்னுடைய மகள் ஒருத்திகூட போரில் இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததே!’ என்றார் என்னிடம் பிரபாகரன். பிரபாகரனை மாத்தையா சுட்டுக் கொன்றார் என்ற வதந்தி பரவிய பிறகு, பிரபாகரனும் மாத்தையாவும் சந்தித்துப் பேசும் விடியோ படம் தமிழ்நாட்டில் காட்டப்பட்டது:

அப்படியும் அந்த வதந்தி அடங்கவில்லை. பிரபாகரன் தங்கியுள்ள இடத்திலிருந்து இரண்டு நாட்கள் நடந்து சென்றால்தான் மாத்தையா தங்கியுள்ள இடத்துக்குச் செல்லமுடியும்! ‘வதந்திகள் தவறு என்பதைக் காட்ட வேலை மெனக்கெட்டு மாத்தையாவை வரவழைத்து விடியோ எடுத்தார்கள்’ என்றார் பிரபாகரன்! பிரபாகரன் மிகுந்த சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கிறார்..

விடியற்காலையில் எழுந்திருப்பார், இரவு பதினோரு மணிக்குப் படுக்கச் செல்கிறார். திடீரென்று நள்ளிரவு நேரத்தில் எழுந்துவிடுவார். அவர் உறக்கம் என்பது கும்பகர்ண உறக்கமல்ல. எந்நேரமும் சிந்தனையோடு இருக்கும் வீரனின் உறக்கம்போலும்.

அந்த உறக்கம் வித்தியாசமானது! உதாரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி அங்கே கூறினார்கள்: ‘புலிகள் ‘கண்ணி ‘ வெடியில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பது தெரிந்ததே. ஒரு நாள் திடீரென்று நள்ளிரவில் விழித்தெழுந்தார் பிரபாகரன். தனது முகாமுக்குப் பக்கத்து முகாமிலிருந்த ‘ரசாயன ஆய்வு’ பிரிவைச் சேர்ந்தவர்களைத் தட்டியெழுப்பினார். புதுவிதமான ‘கண்ணி வெடி’ பற்றி பிரபாகரனுக்கு ஒரு ‘ஐடியா’ தோன்றியிருக்கிறது. அதை அப்போதே உருவாக்கி அந்தக் கண்ணி வெடிக்கு ‘ஜானி’ என்று பெயர் சூட்டினார்.

யார் இந்த ஜானி? பிரபாகரனைச் சந்திக்க இந்திய அரசால் அனுப்பப்பட்டு, திரும்பி வரும்போது ஏதோ சதியால் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர். ஜானி கொல்லப்பட்டதால், பிரபாகரன் ஆத்திரம் கொண்டார். ‘ஜானி’ என்று கண்ணி வெடிக்குப் பெயர் சூட்டியவுடன்தான் அவர் ஆத்திரம் தணிந்தது. (ஒரு விஷயம் – இந்த ‘ஜானி கண்ணி வெடியில்’ சிக்கி கூர்க்கா ரெஜிமெண்டில் நூறு பேர் உயிர் இழந்துவிட்டனர் )

பிரபாகரன் எழுந்தவுடன் வயர்லெஸ் மூலம் செய்திகளை அறிகிறார். நான் போனபோது, மட்டக்களப்பில் டி.என்.ஏ-யுடன் (ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைத்த ராணுவப் பிரிவு) விடுதலைப்புலிகள் போர் புரிந்த நேரம்… வயர்லெஸில் செய்தி கேட்டுச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்

பிரபாகரன் இருக்கும் முகாமில், வந்து சேரும் ஆயுதங்களைப் பிரிக்கும் வேலை நடக்கிறது. ஆயுதங்களும் வேறு பொருட்களும் வேறு சில இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றன.  பிரபாகரன் அவற்றைப் பார்வையிட்டு ஆணைகள் பிறப்பிக்கிறார். பிரபாகரனின் ‘ராணுவ முகாம்’ மிகப் பெரியது. பதினெட்டு டைப்ரைட்டர்களுடன் முறையான அலுவலகமே இயங்குகிறது.

அலுவலகத்தில் அமர்ந்து முக்கிய – பணிகளைப் பிரபாகரன் கவனிக்கிறார். இங்கு ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்தது. ஒவ்வொரு முகாமிலும் நிச்சயம் லைப்ரரி உண்டு.

கல்வி அறிவு இல்லாத சிலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பிரபாகரன் நேரடியாக வகுப்பு எடுப்பதைப் பார்த்தேன். உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்களைப் பற்றியும், அந்தப் புரட்சியாளர்களால் அந்தந்த நாடுகள் பெற்ற நன்மைகள் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்லி உணர்ச்சியூட்டுகிறார் அவர். புதுவிதமான ஆயுதங்கள் வரும்போது, அதை எடுத்து வைத்துக் கொண்டு மற்ற தளபதிகளுடன் பேசுகிறார்… – நான் அவருடன் இருந்த ஒரு நாள், வயர்லெஸில் ஒரு செய்தி வந்தது

முப்பது வகையான துப்பாக்கிக் குண்டுகள் ஓர் இடத்தில் கைப்பற்றப்பட்டதாக!

‘குண்டுகள் எந்தத் துப்பாக்கிக்குச் சொந்தமானது’ – என்பதைப் பார்த்த உடனே சொல்ல வேண்டும் என்று வீரர்களுக்குள் போட்டி ஏற்பட்டது! ‘நானும் அதில் கலந்து – கொள்கிறேன்’ என்றார் பிரபா! ‘நீங்கள் கலந்து கொள்வதானால் கண்களை மூடிக் கொண்டு, குண்டுகளைக் கையால் தொட்டுப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை – போட்டார்கள்!  பிடிபட்ட துப்பாக்கிக் குண்டுகள் சற்று நேரத்தில் ஒரு ட்ரக்கில் வந்து சேர்ந்தன.

பிரபாகரன் கண்கள் துணியால் கட்டப்பட்டது! 50 கலிஃபர் ரவையிலிருந்து .25 வரை பலவகையான குண்டுகள் பரப்பி வைக்கப்பட்டன. பிரபாகரன் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து. எந்தத் துப்பாக்கிக்கு உரியது என்பதைச் சொன்னார்! எல்லாம் கரெக்ட்! . . பிரபாகரன் பலருக்குச் ‘சுடுதல்’ த பயிற்சியும் அளிக்கிறார். குறி பார்த்துச் சுடுவது தவிர ‘ஹிப் பொஸிஷன்’ என்ற துப்பாக்கியை முகத்தருகேயே கொண்டு வராமல் இடுப்பில் வைத்தவாறு சுடும் பயிற்சி அளித்தார். ஹிப் பொஸிஷனில் பிரபாகரன் சுட்டதெல்லாம் குறி தவறாமல் பாய்ந்தது!

காட்டில் பதுங்கி இருந்தாலும், விடுதலைப்புலிகள் யாருக்கும் ஒரு பதட்டமும் இல்லை . வீர உணர்வுடன்தான் இருக்கிறார்கள். அங்கே உடல் ஆரோக்கியத்தைக் காக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுத்தமான தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

குளோரின் போட்டு, காய்ச்சிய சுத்தமான தண்ணீர் அது. இது தவிர வேறு நீரைக் குடித்தால் தண்டனை உண்டு. அங்கே விடியோ படங்கள் எடுக்கப்பட்டவாறு இருக்கின்றன. இயக்கத்தில் சேர்ந்து பிரபாகரனைப் பார்க்காமலேயே இறந்துபோன / விடுதலைப்புலிகள் உண்டு. ‘இனிமேல் – இதுபோன்று நிகழ வேண்டாம்.. படத்திலாவது பார்க்கட்டும்’ , என்பதற்காக பிரபாகரன் பயிற்சி அளிப்பது விடியோ எடுத்துப் பல் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த விடியோ படத்தைப் பிரபாகரன் போட்டுப் பார்த்து, ‘எடிட்’ செய்து அனுப்புகிறார். எல்லாமே அவருக்குக் கச்சிதமாக இருக்க வேண்டுமாம்!

ஒரு தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டால், நான்கு நாட்கள் அந்த இடம் விடுதலைப்புலிகளால் ‘வேவு’ பார்க்கப்படுகிறது. விடியோ காமிராவுடன் ‘வேவு’ வேலை நடக்கிறது. அந்த ‘காஸெட்’ பிரபாகரனுக்கு வந்து சேரும். அதைப் போட்டுப் பார்க்கிறார். எப்படித் தாக்குதல் நடத்தலாம் என்பதை அவர் திட்டமிட்டுத் தருகிறார். அப்படிப் போடப்படும் திட்டமும் விடியோ எடுத்துக் குறிப்பிட்ட இடத்துக்குப் போகிறது. கடைசியில் தாக்குதல் நடப்பதும் விடியோ எடுக்கப்பட்டுப் . பிரபாகரனுக்கு வந்து சேருகிறது! ‘சுடச் சுட வந்த காஸெட்’ என்று இதுபற்றி இருபொருளில் என்னிடம் தமாஷ் செய்தார் பிரபாகரன். மட்டக்களப்பு தாக்குதல் இதே பாணியில்தான் நடந்தது.

காடுகளில் சமையல் வேலை நடக்கிறது. சில சமயம் பக்கத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் மக்கள் சமையல் செய்து அனுப்புகிறார்கள்.. விடுதலைப்புலிகள் நடமாடுவதற்குப் பொதுமக்கள் உற்சாகத்துடன் உதவவே செய்கிறார்கள்.! இதைப் பலமுறை அனுபவத்தில் பார்த்தேன். இந்தியப் படை கடுமையான தாக்குதல் – நடத்திய ஒரு சமயத்தில் – அரிசி, பருப்பு

மட்டுமே இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. உப்புகூட ஒரு வாரம் இல்லை. இப்போது காய்கறிகள் எல்லாம் தாராளமாக உண்டு! காடுகளில் விடுதலைப்புலிகள் யுத்த முஸ்தீபுடன் இருந்தாலும், காடுகள், அழியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால் இரண்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன. விடுதலைப்புலிகள் காட்டில் இருப்பதால், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவோர் நடமாட்டம் இல்லை! அப்படி வெட்டிச் சென்றால், லாரியைப் பிடித்து வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தி லாரியை விடுதலைப்புலிகள் கொளுத்தி விடுகிறார்கள்! இதுதான் தண்டனை.

ஆனால், இந்தியப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசிக் காடுகளை அழித்தனர்.

இந்தியப் படை 250 கிலோகிராம் குண்டு போடுகிறது. முப்பது அடி டயாமீட்டருக்குப் பெரிய குழி ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுகின்றன. இந்தியப் படையிலிருந்து கைப்பற்றப்பட்ட எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிகளை (அவை – காலாவதியானவை என்கிறார்கள் புலிகள்!) திரும்பப் பயன்படுத்துவதில்லை. போரில் இறந்த விடுதலைப்புலிகளின் சமாதிக்கு இந்தத் துப்பாக்கியைத் தலைகீழாக சொருகி வைக்கப் பயன்படுத்துகிறார்கள்!

நான் விடுதலைப்புலிகளின் இதர சில முகாம்களைப் பார்த்தேன். ‘மேஜர் ஜோதியா’ என்ற மகளிர் பிரிவு பொறுப்பாளர் என்னை ஒரு முகாமுக்கு அழைத்துச் சென்றார். முந்நூறு பெண்கள் அங்கே பயிற்சி பெறுவதைப் பார்த்தேன். ஜோதியா சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக (நான் சென்னை திரும்பியதும்) தகவல் வந்திருக்கிறது.

ஜோதியாவின் திடகாத்திரமான தோற்றம் என் கண்முன் இப்போதும் நிற்கிறது! நான் ஊர் திரும்ப வேண்டிய நாள் வந்தது. புலிக்குட்டிகளைத் தடவியவாறு இருந்த பிரபாகரனுடன் தனியாகப் பேசினேன். அவரிடம் மூன்று புலிக்குட்டிகள் இப்போது இருக்கின்றன. விடுதலைப்புலிகள் இயக்கம் – அரசியல் கட்சியாக மாறியிருப்பதைப் பற்றி கேட்டேன். ‘தனி ஈழம் பெறுவது குறித்து உறுதியாக இருப்பேன். பலம் பொருந்திய நிலையில்தான் இப்போது நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறோம். முன்பு ஏமாற்றப்பட்டதை மறந்துவிடவில்லை. பேச்சுவார்த்தைகளில் அதைச் சுட்டிக்காட்டித் தட்டிக் கேட்போம்’ – என்றார் பிரபாகரன் உறுதியான குரலில்.

அடர்ந்த காடும் மாவீரன் பிரபாகரனின் தோற்றமும், விடுதலைப்புலிகளின் தீவிரப் பயிற்சி முறைகளும் இத்தனை நாட்கள் ஆனபிறகும் என் கண்களில் இன்னமும் நிழலாடுகின்றன!”

 

புகைப்படங்களின் இணைப்பு

நன்றி ஜுனியர் விகடன் 31.01.90

 

You may also like...