1. தோழர்களே !

தோழர்களே, 1947-ம் ஆண்டு  தொடங்கிவிட்டது யாருடைய விருப்பு  வெறுப்பையும், எவருடைய தயவு தாட்சண்யத்தையும், எப்படிப்பட்டவருடைய போக்குவரவையும் இலட்சியம் செய்யாமல் ஆண்டுகள் வருவது நடந்துகொண்டே இருக்கின்றது என்பதானது நம் இயக்கத்தின்  நடைமுறையை ஞாபகப்படுத்துகிறது.

ஜாதி, மதம், கடவுள், சமுதாயம், அரசியல்  துறைகளில் புரட்சி மாறுபாடுகள் ஏற்படவேண்டும் என்று கருதி அதாவது இவைகளில் உள்ள நடப்புகள் சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்று இல்லாமல் அடியோடு, அழித்து ஒரே தன்மையானதாக ஆக்கப்படவேண்டும் என்று போராடத் தோன்றிய ஒரு இயக்கம் சுயமரியாதை இயக்கமாகும்.

இந்த நாட்டின் தீண்டாமை ஒழிப்புச் சங்கம் இருக்கலாம் ஆனால் அது ஜாதியை ஒழிக்கச் சம்மதிக்காது, ஜாதி ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்தை ஒழிக்க சம்மதிக்ககாது, அதுபோலவே இந்த நாட்டில் மதம் ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால் அது மதத்துக்கு ஆதாரமான கடவுள்களையும், கடவுள் சம்மந்தமான முரண்பட்ட உணர்ச்சிகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க சம்மதிக்காது, கடவுள் சம்பந்தமான  முரண்பட்ட தன்மை மூடநம்பிக்கை ஆகியவைகளை ஒழிக்கும் சங்கம் இருக்கலாம். ஆனால் அது சம்பந்தமான சாஸ்திர ஆதாரங்களை ஒழிக்கச் சம்மதிக்காது. அன்னிய ஆட்சியை ஒழிக்கும் சங்கமாக இருக்கலாம் ஆனால்; அது அன்னிய பேதங்களை ஒழிக்கும் சங்கமாக இருக்காது.

ஆனால் சுயமரியாதை இயக்கமானது எது சரியோ, அதாவது பகுத்தறிவுக்கு எது சரி என்று பட்டதோ அதைத்தவிர மற்றவைகள் எவை ஆனாலும் அவைகளை அழிப்பதில் துணிவுடன் கவலையுடன் உண்மையுடன் பணியாற்றி வருகிறது, இந்தப் பணிதான் ஆண்டுகள் எப்படித் தோன்றிக்கொண்டே வருகின்றனவோ அதுபோல் நடந்தேறி வருகின்றது.

சுயமரியாதை இயக்கம் 1915 – 26ல் தோன்றியது எனலாம். தோன்றிய காலம் முதல் இதுவரை அதாவது இந்த 20 ஆண்டுகளாக அதில் இருந்தவர்கள் எத்தனை பேர்? புதிதாக வந்தவர்கள் எத்தனை பேர்? என்ற பழங்கணக்கு முதல், புதுக் கணக்கு வரை பார்த்தால் பலபேர்களின் பெயர்கள் மக்கள் கவனத்துக்குத் தென்படலாம். இவர்களில் எதிரிகளானவர்கள் எத்தனை பேர்? பழி தூற்றி விஷமப் பிரச்சாரம் செய்தவர்கள் எத்தனைபேர்? என்று பார்த்தால் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் இயக்கம் மறைந்துவிட்டதாகவோ, இயக்க கொள்கைகள் கைவிடப்பட்டு விட்டதாதவோ திட்டங்கள் சலிப்படையக் கூடியதாகவோ தோல்விக் குறிக்காணக் கூடியதாகவோ எதுவும் காணப்பெறவில்லை.

இந்தியர்கள் இந்துக்கள் என்பவர்களைப் பொறுத்தவரை மதம் மறைந்துகொண்டு வருகிறது, கடவுள்கள் கரைந்து கொண்டு வருகின்றன. சாதி?சமுதாயம் செத்துக்கொண்டு வருகின்றது, சாஸ்திரங்கள், சாம்பலாகிக்கொண்டு வருகின்றன. ஆனால் இவை வேகமாகச் செல்லவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் அவையாவும் அவ்வவற்றின் ஆட்சிப்பீடத்தில் இருந்து அகன்று செல்ல அடி எடுத்து வைத்துவிட்டன. சில அடி தூரம் நடந்தும்விட்டன.

— இஸ்லாமிய சமுதாயம் (முஸ்லிம் லீக்)  நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டது.

ஆதிதிராவிடச் சமுதாயம் (செட்யூல்ட் வகுப்பு) நாங்கள் இந்துக்கள்  அல்ல   என்று சொல்லிவிட்டது.

திராவிட கழகம் (தங்களைத் திராவிடர்கள் என்று கொள்ளும் சமுதாயம்) நாங்கள் இந்தியர்களுமல்ல, இந்துக்களுமல்ல என்று சொல்லிவிட்டது.

ஆகவே சுயமரியாதை இயக்கம் மதம் சமுதாயம் என்பதில் பெரும்பாலோரிடையில் வெற்றி கண்டுவிட்டதென்றே சொல்லலாம்.

சமுதாய பேதங்கள் இன்று இந்தியா முழுவதிலும் அல்லாவிட்டாலும் திராவிடநாடு முழுவதிலும் பல பேதங்கள் ஒழிந்து இரண்டுவித சமுதாய பேதம்தான் இருக்கும்படியான நிலையை வந்து அடைந்துவிட்டது. அது என்னவென்றால் ஒன்று பார்ப்பன சமுதாயம், மற்றொன்று பார்ப்பனர் அற்ற சமுதாயம் என்பது ஆகும்.

இந்தத் துறையில் சுயமரியாதை இயக்கம் நல்ல வெற்றி பெற்றிருப்பதை யாரும் மறுக்க முடியாது என்போம்.

பார்பனர் என்கின்ற சமுதாய பேதம் சில துறைகளில் இருந்துவருவதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அது இன்னும் சிறிது காலத்துக்காவது இருக்கவேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.

நம்முடைய சுயமரியாதை இயக்கத் தொண்டானது பெரிதும் பார்ப்பனன் வேறு நாம் வேறு என்கின்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.

பார்ப்பானை வேறுபடுத்திக்காட்டுவதன் மூலமே ஜாதி மத, கடவுள், சாஸ்திர, புராணத்தொல்லையில் இருந்தும், கொடுமையில் இருந்தும் மக்களை மீளவைக்க சுலபமாக முடிகிறது. கோவில்குளம் கொள்ளைகளையும் ஒழிக்க சவுகரியம் ஏற்படுகிறது. ஆதலால் பார்ப்பானுக்கு என்று சில தனி உரிமையும் பங்கும் இருப்பதும் நமது இயக்கத்திற்குத் தடை என்றோ கேடு என்றோ சொல்ல முடியாது. நல்லபடி வேலைசெய்யப் பயன்படும். ஆதலால்தான் சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான 1926?ம் ஆண்டிற்கும் இடையில் நடந்த காரியங்கள் மாறுதல்கள் ஆகியவை இயக்கத்துக்குப் பெருமையும், பாராட்டுதலும் , ஒரு அளவு வெற்றியும் ஆகுமே தவிர யார் போனதினாலும் யார் எதிர்த்ததாலும், யார் சேர்ந்ததாலும் குற்றம் குறை கூறக்கூடிய ஆகிவிடவில்லை என்று நாம் சொல்லுகிறறோம்.

பொருளாதாரத் துறையிலும் சு.ம. இயக்கக் கொள்கை நாட்டில் பலப்பட்டும் ஒரு அளவுக்குச் செல்வாக்குப் பெற்றும் காரியத்திலும் தலைகாட்டியும் வருகிறதே ஒழியதளர்ந்தோ பின்னமடைந்தோ போய்விடவில்லை.

என்றாலும் இனியும் சுயமரியாதை இயக்கத்திற்கு வேலை இல்லைஎன்று சொல்லி விடமுடியாது. அதற்குச் செய்யவேண்டிய வேலையை விடச் சொல்லவேண்டியவேலை அதிகம் இருக்கிறது. உதாரணமாகக் கோவிலுக்குள் யாவரும் எல்லா சமுதாயத்தாரும் செல்ல வேண்டும் என்று சொன்னதை இன்று பார்ப்பனர்களே எல்லா வகுப்பு மக்களையும் கோவிலுக்குள் அழைத்துப் போக வேண்டியவேலை செய்கிறார்கள். என்றாலும் அதற்கும் மேல் நாம்  ஏன்  நாங்களும் சாமி இருக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது? ஏன் சாமிக்கு நாங்களும் பூசை படையல் செய்யக்கூடாது?என்று சொல்ல வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதுவும் முடிவதாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு அப்புறமும் நாம் சாமிக்கு இந்த மாதிரி உருவம் பூசை படையல் கல்யாணம் முதலிய சடங்கு ஏன் என்று சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். இப்படியாகப் பல காரியங்கள், கருத்துக்கள் ஆகியவைகளை நாமேதான் இன்று இந்த நாட்டில் செய்யவும் சொல்லவும் வேண்டியவர்களாக இருப்பதால் நமக்குச்  சுலபத்தில் ஓய்வு கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது.

இப்படிப்பட்ட ஒரு புரட்சி இயக்கம் இப்படிப்பட்ட எதிரிகள் இடையில் இருந்து ஆண்டுகள் தோன்றுவதுபோல் தோற்றமளித்துத் தனது பணியை ஆற்றிவருகின்றது, என்றும் ஆற்றி வரும்.

ஆகவே பகுத்தறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள தன்னலமற்ற இளைஞர்கள் வேகத்தில் கலந்து வெற்றியின் பங்கை அடைய வேண்டியதே 1947-ம் ஆண்டு தோன்றியதின் படிப்பினையாகும்.

குடி அரசு தலையங்கம் 04-01-1947