1. தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி பெரியார் பேசினது

சுமார் 15- – வருடங்களுக்கு முன்  சென்னை ராயபுரத்தில்  கண்ணப்பர் வாசகசாலையைத் திறந்துவைக்கையில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள்  ஆற்றிய சொற்பொழிவு இன்று நாட்டில் கிளப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைக்குப் பொருத்தமானதாகயிருப்பதால் அதன் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:?

ஆதிதிராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில்  மிருகங்களைவிடக் கேவலமாகத் தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்களுக்குள் சிலர் ராவ்பகதூர்களாயும்,  ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும்  செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம்.

மற்றும் உங்களுள் ஞானமுள்ள  அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம்.

எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும்  பிறந்த ஜாதியையொட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.

அதற்கு  ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையேயாகும்.

ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக்கூடாதெ- ன்கிறார்கள். (இப்பொழுது ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் அனுமதிக்கப்டுகின்றார்கள் என்றால், அது அரசாங்கத்தாரின்  சட்டபலத்தைக் கொண்டு. ஆனால், பொதுவாகத் தாழத்தப்பட்டோர்  அனுமதிக்கப் படுகிறார்களா என்பதையும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை ஆதரிக்கிறார்களா என்பதையும் இதுசமயம்  எண்ணிப் பார்க்க வேண்டும். (ஆர்)  ஆதிதிராவிடர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை  இழிவுபடுத்திக் கொடுமை செய்தில் ஒரு சிறிதும்  பின்வாங்குவதில்லை.

பிறவியில்  மிருகமாய்ப் பிறந்தும் ஜாதியில் நாய் என்றழைக்கப்படுவதுமான, மலம் உண்ணும் கேவலமான  ஜந்துவையும் தாராளமாக  விட்டுவிடும்போது, ஆறறிவுள்ள  மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் ஒரு முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும் விட மறுக்கப்படுவது என்ன கொடுமை?

இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால்  அவர்கள் இந்துக்களாயப் பிறந்துவிட்டார்கள், அவர்களைக் குறித்து மனு தர்ம சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது, வேதத்தில் சாமகாண்டங்கள் அப்படி சொல்லுகின்றன என்று சாஸ்திரக் குப்பைகளின்  மீது பழியைப் போடுவதோடு  மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இவ்வாறு மதத்தின் பேராலும், சமய நூல்கள், சாஸ்திரங்கள் புராணங்களின் பேராலும் செய்யப்படும்  கொடுமைகளுக்கு அளவில்லை.

ஆயிரக்கணக்கான  வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர  புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமூகம்  கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர்களாகிய உங்களைவிட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப்படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை.

உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும். குளிக்கவேண்டுமென்பது போலத் தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திர்கள், வேசிமக்கள்,  பார்ப்பனனுக்கு அடிமைசெய்யப் பிறந்தவர்களென்ற இழிபெயர்களுமிட்டழைக்கிறார்கள்.

இக்கேவலச் செயல்களுக்குக் கடவுளால் எழுதிவைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென்கிறார்கள்.

நம் மக்களுக்குள் அநேகர் எவர் எப்படிச் செயதாலென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக்கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையிலீடு பட்டிருப்பதனால் தான்  ஆயிரக்கணக்கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

நம் ஜீவனத்துக்கு வழியைப் பார்ப்போமென்று இழிவுக்கு இடங்கொடுத்துக்கொண்டு போகும்வரை சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்மேற்படாது என்பது திண்ணம், கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை  ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான்  தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.

உலகத்தில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம்  போட்டுக்கொண்டு ஜாதிவித்தியாச் கொடுமைகளை நிலைநாட்டி சமூக முன்னேற்றத்துக்கும்  விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர, புராணங்களையும்  சுட்டெரிக்கச் சுயமரியாதைக் காரர்கள் தயாராகயிருக்கிறோம்.

கொடுமை  செய்யும் மதத்தையும், சாஸ்திரத்தையும், கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்குட்பட்டுக் கேவலாமாகத்தானிருந்தாக வேண்டும்.

சம உரிமையில்லாதிருப்பதைவிட சாவதே மேலொன்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு என்றும் தடையாயிருக்க முடியாது.  அதற்குத் தடையாயிருக்கும் கடவுளும்,  மதமும்,  மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை.

ஜாதிகொடுமைகளை  ஒழிக்க  நமது பெரியோர்கள் எவ்வளவோ பாடுபட்டு வந்தார்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்த  கபிலர் காலத்திலும்,  திருவள்ளுவர் காலத்திலும், அதற்குப் பின்னரும் ஜாதியில்லை.

ஒழுக்கத்தினால்தான் உயர்வு தாழ்வு என்று எவ்வளவோ  வற்புறுத்தப்பட்டு வந்தும் ஜாதிக்கொடுமைப் பேய்கள் ஒழிந்தபாடில்லை.

நமது பெரியார்கள் சொல்லியவை ஆயிரக்கணக்காகப் பிறரால்  வாயளவில்  பாராயணம்  செய்யப்படுகின்றனவேயன்றி  செய்கையில்  அதனால் ஒரு பலனுமேற்பட்டதாய்த் தெரியவில்லை.

இன்றைக்கும் ஜாதிக்கொடுமையினால் இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப்பட்டுவிடும், அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலை விரித்தாடுகின்றன.

இவ்வுலகில் பல மதக்கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்குமுட்பட்டு கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டு  பின்னால் மோட்சமடைவதைவிடச் சமத்துவம் பெறுவது தான் பிரதானமென்று சொல்லுவேன்.

ஜாதிக்கொடுமையை ஒழித்து இங்கு சமத்துவத்தைக் கொடுக்காத சாமி அங்கு மோட்சத்தையும், ரம்பை, ஊர்வசி நடனத்தையும், தங்க மெத்தையையும், சுக போகத்தையும் கொடுக்கிறதென்றால் அதை நம்புகிறவன் மடையனா வென்று கேட்கிறேன்.

நம்முடைய உதவி வேண்டும்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நமது சுதந்திரத்தையும் உரிமைiயும், கேட்டால் சாமி செத்துப் போகுமென்பதும் என்ன அயோக்கியத்தனமென்றுதான் கேட்கிறேன்.

தீண்டப்படாதார் தாழ்ந்தவர்கள் என்று கொடுமையாக ஒதுக்கி ஒடுக்கப்பட்டு துன்புறும் மக்களுக்கும்  உயர்ந்த ஜாதியார்  கடவுள் முகத்தினில் பிறந்தவர்களென்று  சொல்லிக் கொள்ளுபவர்களுக்கும், குணத்தினாலும், உருவத்தினாலும், அறிவினாலும்  ஏதாவது  வித்தியாசமிருக்கின்றதாவென்று கேட்கிறேன்.

இவ்வாறிருக்க  மக்களின்  பெரும்பான்மையோரை  ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்குமுட்படுத்திவைக்க மதப் புரட்டுகளும், புராணப் புரட்டுகளும்தான் ஆதாரமாகயிருக்கின்றன.

மக்கள்  சுதந்தரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாயிருக்கும் இவ்விந்து மதத்தையும் புராணங்களையும் ஒழிக்காமல் பின் என்ன செய்வது என்பதை நீங்களே  எண்ணிப்பாருங்கள்.

குடிஅரசு 06-01-1945