பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’
பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் பிடியில் உள்ள வங்கிகள் கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்கும், தொழிலதிபர்களிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு கடன் வழங்குவதற்குமே பெரிதும் பயன்பட்டு வருகின்றன. பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள ‘அய்சி.அய்.சி.அய்.’ வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த ஒருவர் ஊழலில் சிக்கி இப்போது சி.பி.அய். விசாரணையில் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இப்போது ‘எஸ்’ என்ற தனியார் வங்கி திவாலாகியிருக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு ரிசர்வ வங்கி கண்காணிப்பின் கீழ் உள்ள இந்தத் தனியார் வங்கி, கடனாக வழங்கிய தொகை ரூ.55,633 கோடி. இது மார்ச் 2019இல் ரூ.2,44,999 கோடியாக சுமார் 8 மடங்கு உயர்ந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மக்கள் சேமிப்பிலிருந்து இந்தத் தொகை கடனாக ‘தானம்’ செய்யப்பட்டு, பிறகு திருப்பித் தராமல் ‘பட்டை நாமம்’ சாத்தப்பட் டுள்ளது. 2014லிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடந்த பா.ஜ.க. ஆட்சியில் மேலிட செல்வாக்குடன் கடன் பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் மோசடி நிறுவனங் களாகும். ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும், பல்வேறு மோசடி புகார்களில் சிக்கியிருந்த திவான் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமும் (திவான் அவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் – டி.எச்.எப்.எல்.), ‘அய்.எல். மற்றும் எஃப்.எஸ்.’ நிறுவனமும் கடன் பெற்ற நிறுவனங்களாகும். ஏற்கனவே மோசடி செய்த நிறுவனங்களுக்கு வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மீண்டும் கடன் வழங்கிய முறைகேடுகளை அறிந்த ‘ரிசர்வ் வங்கி’, அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க மறுத்தது.
நியாயமாக ரிசர்வ் வங்கி இவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க மறுத்ததற்கான காரணத்தை வெளியிட்டிருக்க வேண்டும். திருப்பித் தர முடியாத நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் வழங்கப்பட்ட உண்மை வெளியே தெரிந்திருக்குமானால் வங்கியில் பணம் போட்டவர்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். வங்கியை திவாலாகாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க முடியும். ரிசர்வ் வங்கி மவுனமே சாதித்தது. கடைசியாக ரிசர்வ் வங்கி, தனது முடிவை மாற்றிக் கொண்டு ராணா கபூரின் பதவிக் காலத்தை ஜன.2019 வரை நீட்டித்து பதவியில் தொடர அனுமதித்தது. முதலில் பதவி நீட்டிப்பை மறுத்த ரிசர்வ் வங்கி, மோசடிகளை நன்றாக தெரிந்த பிறகும் ஏன் தனது முடிவை மாற்றிக் கொண்டது என்பது விடை தெரியாத கேள்வி.
‘டி.எச்.எஃப்.எல்.எஸ்’ மோசடி நிறுவனத்துக்கு கடன் வழங்கியதற்காக கபூர் ரூ.600 கோடி இலஞ்சம் பெற்றுள்ளார். இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, போலியான 79 நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனம் வாங்கிய மொத்தக் கடனில், 4 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ராணா கபூரின் ‘எஸ்’ வங்கியில் பெற்றதாகும். இதற்கு கைம்மாறாக ராணா கபூரும், அவரது மகள்கள் இருவரும் இயக்குனராக உள்ள ‘டூயிட் அர்பன் வெஞ்சர்ஸ்’ எனப்படும் நிறுவனத்தில், ரூ.600 கோடி ரூபாய் (இலஞ்சமாக) முதலீடு செய்துள்ளதை அமுலாக்கத் துறை கண்டுபிடித்து, கபூரை கைது செய்துள்ளது. இலண்டனுக்கு தப்பி ஓட முயன்ற கபூரின் மகள் ரோஷினி, பம்பாய் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 8 மாத காலத்தில் கபூர் மூன்று முறை இலண்டனுக்கு சென்று திரும்பியுள்ளார். பெரிய புள்ளிகளுடன் பேரங்கள் நடந்துள்ளன என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கூறுகிறது. கபூர், அமெரிக்காவின் வங்கி ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி இந்தியா திரும்பியவர்.
‘பூரி ஜெகநாதன்’ பணமும்’ திவால்?
ஒரிசா மாநிலம் பூரியில் பிரபலமான ஜெகநாதன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.546 கோடி ‘எஸ்’ வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணம் ‘பகவானுக்கு’ திரும்பி வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வங்கியிலிருந்து ரூ.50,000/-க்கு மேல் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தள்ளது. இதனால் வங்கியில் பணம் போட்டவர்கள் பதற்றத்தில் உள்ளனர். பூரி கோயிலின் தலைமை அர்ச்சகரான பினாய்க்தாஸ் மொகாபாத்ரா என்பவர் கோயிலுக்கு சொந்தமான இவ்வளவு பெரிய தொகையை தனியார் வங்கியில் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டுகிறார். ‘நிரந்தர சேமிப்புத் திட்டத்தில் தான் தற்காலிகமாக முதலீடு செய்யப்பட்டது. இம்மாத இறுதியில் சேமிப்பு காலம் முடிவடையும்போது தேசிய மய வங்கிக்கு மாற்றப்படும்” என்கிறார் ஒரிசா சட்ட அமைச்சர்.
பூரி ஜெகநாதன் கோயில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் கோயில் பணம் மட்டும் அரசுடைமை வங்கியில் இருப்பதுதான் பாதுகாப்பு என்கிறார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.
பெரியார் முழக்கம் 12032020 இதழ்