லிங்காயத்து மடத்துக்கு இஸ்லாமியர் தலைவரானார்

முஸ்லீம்களை அன்னியர்களாக்கி வெறுப்பு அரசியலை ஒவ்வொரு நாளும் சங்கிகள் பார்ப்பனர்கள் அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கருநாடகாவில் ‘லிங்காயத்து’ மடம் ஒரு இளம் இஸ்லாமியரை தனது தலைவராக்கியுள்ளது.

லிங்காயத்து என்ற பிரிவை 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கியவர் பசவா என்று அழைக்கப்படும் பசவண்ணா, மிகச் சிறந்த கவிஞர்; தத்துவவாதி; பார்ப்பனியத்தை சுட்டெரிக்கும் கவிதைகளால் சாடியவர். அவர் உருவாக்கிய மார்க்கத்தில் உறுப்பினர்களானவர்களுக்கு ஜாதி அடையாளம் கிடையாது. ‘இந்து’ என்ற அடையாளமும் கிடையாது. பசவண்ணாவின் ஜாதி எதிர்ப்பு முற்போக்கு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட எந்த மதத்தவரும் தலைவராகலாம். இப்போது பசவண்ணா தத்துவத்தை ஆழமாகப் படித்து அதை ஏற்றுக் கொண்ட ஹரியஃப்முல்லா என்ற இஸ்லாமிய இளைஞர், மடத்தின் தலைவ ராகியுள்ளார். பசவண்ணா உள்ளூர் மன்னரின் அரசவையில் நிதி மேலாண்மை செய்யும் உயர் அதிகாரப் பதவியில் இருந்தவர். அரசருக்கு பசவண்ணாவின் சீர்திருத்தக் கருத்துகளில் உடன்பாடு இல்லை. ஒரு முறை தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞனுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்குமிடையே பசவண்ணா ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முன் வந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகி கலவரமாக வெடித்தது. மன்னரின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார். தங்களை இந்து மதப் பிரிவில் சேர்க்கக் கூடாது என்பது லிங்காயத்துகளின் நீண்ட நாள் கோரிக்கை. கருநாடகத்தில் ஜனதா தளம் (மதச் சார்பின்மை), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்தது. ஆனால் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இதற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டது.

இந்து மதம் எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு சமூகமே தனி மார்க்கமாக செயல்பட முன் வந்தாலும் அதை ஏற்க மறுக்கிறது பார்ப்பனியம். இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்று இவர்கள் பேசுவது மோசடி என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா? இஸ்லாமிய வெறுப்பை பார்ப்பனர்கள் கக்கி வரும் சூழலில் லிங்காயத்து மடம் இஸ்லாமியரை அதன் தலைவராக்கி யிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய முற்போக்கான நடவடிக்கை.

பெரியார் முழக்கம் 27022020 இதழ்

You may also like...