அமேசான் காடுகளுக்கு தீ வைத்த பிரேசில் அதிபர் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராம்
இந்தியாவின் 71ஆவது குடியரசுத்தின விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக, ஒரு தீவிர வலதுசாரியும், கடைந்தெடுத்த பிற்போக்காளருமான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை அழைத்து வந்தது மோடி அரசு . பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 11ஆவது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு இடையே பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார்.
அப்போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுத்தான், 71ஆவது ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஜெய்ர் போல்சானரோ தில்லிக்கு வந்துள்ளார். பிரதமர் மோடி போகிற போக்கில், இந்த அழைப்பை விடுத்ததாக பார்க்க முடியாது. ஆர்எஸ்எஸ். பாஜகவின் சனாதன சித்தாந்தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போல்சானரோ. ஆர்எஸ்எஸ். – பாஜகவைப் போல, பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், விளிம்புநிலையினர், அகதிகள் என – இவர்கள் யாரையுமே பிரேசில் ஜனாதிபதி போல்சானரோவுக்கு ஆகாது. “உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன். நீ அதற்கு தகுதியானவள் கிடையாது”- என்று நிச்சயமாக ஒரு நாட்டின் தலைவர் பேசமாட்டார். ஆனால்பிரேசில் ஜனாதிபதி போல்சானரோ, பேசிய பேச்சுதான் இது. 2003ஆம் ஆண்டின் போது, நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவரைப் பார்த்து இவ்வாறு பேசிய போல்சானரோ, கேமிராக்களின் முன்னிலையிலேயே அந்த பெண் உறுப்பினரின் மார்பில் கை வைத்து தள்ளியும் விட்டார். பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியைக் கிண்டலடித்ததுடன், பெண் பத்திரிகையாளர் ஒருவரையும் தரக்குறைவாக விமர்சித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, “போலீஸ் விசாரணையில் சித்ரவதைசெய்யும் முறையை சட்டப்பூர்வமாக்குவோம்” என்று போல்சனாரோ வாக்குறுதி அளித்ததும், “என் மகன் தன்பாலின ஈர்ப்பாளர் என்று தெரிந்தால், அவன் மீது எனக்கு பாசம் இருக்காது. அவன் வாழ்வதற்கு பதிலாக சாகலாம்” என்றதும் பிரேசிலில் பிரபலமான நிகழ்வுகளாகும்.கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் பிரேசிலின் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லையே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு “போதுமான அளவுக்கு இராணுவம் மக்களைக் கொல்லாததே அதற்கு காரணம். இன் னும் ஒரு முப்பதாயிரம் மக்களைக் கொன்றிருக்க வேண்டும்” என்று போல்சானரோ பேசியபோது உலகமே அதிர்ச்சி அடைந்தது.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான், பழங்குடி மக்களுக்கு எதிராக, அமேசான் காடுகளுக்கு தீ வைத்த ஒரு குரூரமான பேர்வழியைத்தான்- இந்திய குடியரசு தின சிறப்பு அழைப்பாளராக மோடி அரசு அழைத்து வந்துள்ளது. ஒரு வலதுசாரி பிற்போக்காளரை மனிதகுல விரோதியை மேடையில் ஏற்றி, இந்திய குடியரசுத் தின விழாவை சிறுமைப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது.போல்சானரோவின் அனைத்து குரூரங்களும், பிற்போக்குத்தனங்களும் மத்திய பாஜக அரசுக்கு அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியவைதான். எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டம்கொண்டுவந்து, சொந்த மக்களையே அகதிகளாக்கி வதை முகாமில் அடைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் மோடி அரசுக்கு, அகதிகளை ‘பூமியின் கழிவுகள்’ என்று போல்சனாரோ அழைத்தது, ஒரு உடனடி ஈர்ப்பை அளித்திருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சுற்றுச் சூழல் அமைப்புகள் பிரேசில் அதிபரை விருந்தினராக அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
பெரியார் முழக்கம் 30012020 இதழ்