ஒரே சத்தம்….? ஆரூர் புதியவன் – தீக்கதிர் வண்ணக்கதிர்

ஒரே…

ஒரே..

என்றாக்குவதே

ஒரே லட்சியம்

என்றிருப்பவரைச் சுற்றி

ஒரே மாதிரி சிந்திப்போரே

ஒரே கூட்டமாய்

இருந்தனர்

அங்கு

ஒரே கூச்சல்…

ஒரு நாடு

ஒரே மதம் என்றார்

ஒரு நாடு

ஒரே மொழி என்றார்

ஒரு நாடு

ஒரே பண்பாடு என்றார்

ஒரு நாடு

ஒரே ரேஷன் கார்டு என்றார்

ஒரு நாடு

ஒரே தேர்தல் என்றார்

ஒரு நாடு

ஒரே ஆட்சி என்றார்

ஒரு நாடு

ஒரே பதவி என்றார்

ஒரு நாடு

ஒரே தட்பவெப்ப நிலை

என்றார்…

கூட்டம்

ஆம்… ஆம்…

ராம்… ராம்…

என்று

கூச்சல் போட்டது…

வேறெதையெல்லாம்

‘ஒரே’ ஆக்கலாம்

என்ற

விளம்பினார்

விளம்பர நாயகர்…!

கிளம்பின

‘ஒரே’ குறித்த

வெவ்வேறு யோசனைகள்…!

பிரபோ…?

“வெவ்வேறு நாள்களில்

குழந்தைகள் பிறப்பது

வேற்றுமையை வளர்க்கும்…

எனவே

ஒரு நாடு

ஒரே பிறந்தநாள்”

என

அறிவிக்கலாம்…

என்றார்

வினயமாய் ஒருவர்.

ஆவேசமாய் எழுந்த

அடுத்த அறிவாளி

“ஒரு நாடு

ஒரே பிறந்தநாள்

என்ற திட்டத்தோடு

‘ஒரு நாடு

ஒரே இறந்தநாள்’

என்ற திட்டமும்

கொண்டு வரப்பட வேண்டும்

ஆளுக்கொரு நாளில்

செத்தால்

அன்னை தேச ஒற்றுமை

செத்து விடாதா?”

என்றார்…

“மகளிர் சார்பாக

ஓங்கிக் குரல் கொடுத்த

பெண்மணி

அந்த மூன்று நாள்களும்

கூட

அகில இந்தியாவுக்கும்

ஒன்றாக இருக்க வேண்டும்

பாரத் மாதாவின்

பிள்ளைகளிடையே

வெவ்வேறு மூன்று நாள்கள்

விரோதத்தை வளர்க்கும்”

என்றார்…

“உணவகங்களில் இருக்கும்

மெனு கார்டுகளைத்

தடை செய்ய வேண்டும்…

ஒரு நாடு

ஒரே உணவு…”

என்று

கைஉயர்த்தி முழங்கினார்

காவி அஸ்திரத்தை

தரைவரைக்கும் போட்டவர்

அதுசரி

“ஒரு நாடு

ஒரே சாதி

என்று அறிவித்தால்

என்ன” என்றார்.

கூட்டத்தில் கலந்திருந்த

ஒரு கறுப்புச் சட்டைக்காரர்

“ஹேய் ஆன்ட்டி இண்டியன்”

என்று அனைவரும்

ஒரே குரலில்

ஓங்கிக் கத்தினர்…

ஒரே சத்தம்…!?

– தீக்கதிர் வண்ணக்கதிர்

 

நிமிர்வோம் செப்டம்பர் 2019 மாத இதழ்

You may also like...