மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் அய்.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் ர. பிரகாசு
அனைத்திந்திய ‘தலித் மகிளா அதிகார் மான்ச்’ என்ற இந்த தலித் பெண்கள் அமைப்பு இந்தியாவில் நடந்த ஜாதி ரீதியான வன்முறைகளைத் தொகுத்து ஜூன் 21ஆம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் (ருசூழஊசு) கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிப்பது, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நிலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாத இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக்குவது, தாழ்த்தப்பட்டவர்களை ’தலித்’ என்று அழைக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டது போன்ற செயல்கள் அண்மைக் காலங்களில் நடந்தன. இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜகவும் தான் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பு அரண்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கவே செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துவிட்டது என்றும் மோடி தொடர்ந்து சில இடங்களில் பதிவு செய்தார். பிரதமரின் இந்தக் கூற்றும், இவர்களின் செய்கைகளும் உண்மைதானா என்பதைக் காண்போம்.
பேஷ்வா பார்ப்பனர்களின் படையை 1818ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பனியுடன் இணைந்து மகர்களின் படை போரில் வீழ்த்தியது. இந்த யுத்தத்தின் நினைவாக இப்போதைய மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள பீமா கோரேகான் பகுதியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. போர் வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதியில் வட மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த நினைவுச் சின்னத்துக்கு பேரணியாக வந்து வரலாற்றை நினைவுகூறுவதை வழக்கமாகக் கொண் டுள்ளனர். இவ்வளவு காலம் அமைதியாக நடந்துவந்த இந்த நிகழ்வு 200ஆவது நினைவு ஆண்டான இந்த ஆண்டில் மட்டும் கலவரத்தில் முடிந்து உயிரிழப்புகள் வரை சென்றது. பார்ப் பனர்களின் வீழ்ச்சியைத் தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டாடுவதா என்ற வயிற்றெரிச்சலில் இந்துத்துவ கும்பல்கள் இந்தக் கலவரத்தை திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தின் உனா பகுதியில் 18 வயதுக்குக் குறைவான இளம்பெண் பாஜக சட்ட மன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்த அந்த இளம்பெண்ணின் தந்தை காவல் துறை விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அரியலூரைச் சேர்ந்த 16 வயது மாணவி நந்தினி 2016ஆம் ஆண்டு டிசம்பரில் இந்து முன்னணி நிர்வாகிகளால் பாலியல் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் நமக்கு நினைவிலிருக்கும். கத்துவாவில் 8 வயது இசுலாமிய சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கோயிலுக்குள் வைத்து வன்புணரப்பட்டு படுகொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவமும் இந்த ஆண்டில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அவர்களை விடுவிக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவை மட்டுமின்றி பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் குஜராத்தில் 4 தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்கள் இந்துத்துவக் கும்பலால் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவமும் கடந்த ஆண்டில் நிகழ்ந்தது.
இதுபோன்ற பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் சங் பரிவார் கும்பல்களால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களும், கொலை களும் அதிகளவில் நடந்துள்ளன. இவ்வாறாக தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது பாஜக மற்றும் இந்துத்துவக் கும்பல்கள் தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நிகழ்த்தியது மட்டுமின்றி ஆதிக்க ஜாதி வெறி இந்துக்களும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட செய்திகள் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருந்தன. அண்மையில் நடந்த கச்சநத்தம் படுகொலை வரை இதற்கும் பல உதாரணங்களை சொல்லலாம்.
இவ்வாறாக, செய்திகளில் வந்தவையே கடந்த 4 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நமக்குக் கட்டாயம் உணர்த்தும். மேலோட்டமாக செய்திகளில் வந்தவற்றை மட்டும் பார்க்காமல் கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டிருக் கின்றன என்பதைப் புள்ளி விவரங்களோடு பார்த்தால் இன்னும் பெரிய பேரதிர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. இந்தப் பணியைத்தான் அனைத்திந்திய தலித் மகிளா அதிகார் மான்ச் என்ற பெண்கள் அமைப்பு செய்துள்ளது. இந்த தலித் பெண்கள் அமைப்பு இந்தியாவில் நடந்த ஜாதி ரீதியான வன்முறைகளைத் தொகுத்து ஜூன் 21ஆம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவின் (UNHCR) கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.
“Voices Against Caste Impunity: Narratives of Dalit Women in India” என்ற தலைப்பில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பெரும்பாலும் அரசுத் தரவுகளின் ஆதாரங்களைக் கொண்டே தயார் செய்யப்பட் டுள்ளது. இந்த அறிக்கையில் சொல்லப்பட் டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஸ்க்ரால், ஃபிரண்ட்லைன் போன்ற ஊடகங்கள் சிறப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டு விவாதங்களை உண்டாக்கியுள்ளன. ஆனால் தமிழக ஊடகங்கள் இதுவரையிலும் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனித்து வருகின்றன. இந்த அறிக்கையில் சொல்லப்பட் டிருக்கிற புள்ளி விவரங்களை நாம் இப்போது சுருக்கமாகக் காணலாம்.
மோடி அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துகிறார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறார். 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருக்கிறது என்று திட்டவட்டமாக தனது கருத்துக்களை முன் வைக்கிறது இந்த ஆய்வு. 2014ஆம் ஆண்டில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மிக அதிக அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் (NCRB) கணக்குப்படி அந்த ஒரு ஆண்டில் மட்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், பாலியல் வன்முறைகள் தொடர்பாக அளித்த புகார்களில் 47,064 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது 2013ஆம் ஆண்டைக் காட்டிலும் 19 விழுக்காடு அதிகமாகும். 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 744 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். முந்தைய ஆண்டில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 676ஆக இருந்தது.
ஆட்சி அதிகாரத்தில் பாஜக இருந்த திமிரில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இந்துத்துவப் பாசிசத்தை சங் பரிவாரங்கள் ஒரே ஆண்டில் மிகத் தீவிரமாக ஏவியிருப்பதையே இது காட்டுகிறது. ஏனென்றால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பாஜக நேரடியாக வும், கூட்டணியிலும் ஆட்சியில் இருந்த மாநிலங்களில்தான் இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் 2013ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் இத்தகைய குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2015ஆம் ஆண்டில் 38,680 வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 40,801 வழக்குகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பாக பதிவாகியுள்ளன.
ஒட்டு மொத்தமாகக் கடந்த 10 ஆண்டு களில் 66 விழுக்காடு அளவுக்கு வன் கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகள் இரட்டிப்பாகியுள்ளன. 2006ஆம் ஆண்டில் தோராயமாக நாள் ஒன்றுக்கு 3 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். இது 2015ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி நாள் ஒன்றுக்கு 6ஆக அதிகரித்து விட்டது. இது வெறும் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கையே தவிர உண்மைக் கணக்கு மிக அதிகம் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பலர் வழக்குப் பதியாமல் விட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதற்கு அப்பகுதியில் வாழும் ஆதிக்க ஜாதிகளின் அழுத்தம் முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
இந்த ஜாதிய அடுக்குமுறைகளைக் கொண்ட சமூகக் கட்டமைப்பின் விளைவால் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் அவர்களது சுகாதாரம், கல்வி, வாழ்க்கை நிலை போன்றவற்றை எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும் இந்த ஆய்வில் தலித் பெண்கள் அமைப்பு முன்வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராவர். அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20.14 கோடி பேர் தாழ்த்தப்பட்டவர்கள் ஆவர். இந்த மக்கள் தொகை 2015ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்பநல சுகாதார ஆய்வறிக்கையின்படி நாட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 20.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதில் நகரங்களில் 16.8 விழுக்காட்டினரும், கிராமங் களில் 22.6 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர்.
இந்திய அளவில் பார்த்தால் கல்வியறிவிலும் தாழ்த்தப் பட்டவர்கள் மற்ற சமூகத்துடன் ஒப்பிடுகையில் பின்தங்கித்தான் உள்ளனர். தேசிய மாதிரி ஆய்வறிக்கையின்படி தாழ்த்தப்பட்ட சமூகத்து ஆண்களில் 64.21 விழுக்காடு ஆண்களும், 48.33 விழுக்காடு பெண்களும் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர். அதிகமான ஒடுக்குமுறைக்கு இவர்கள் தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுவதே கல்வியறிவில் இவர்கள் மிகவும் பின்தங்கி யிருப்பதற்கு காரணமாகவுள்ளது.
இப்பிரிவைச் சேர்ந்த 52.6 விழுக்காடு மக்கள் சாதாரணக் கூலிகளாகத்தான் இருக் கிறார்கள். இவர்களில் வெறும் 0.8 விழுக்காட்டினரிடம் மட்டும்தான் 4 ஹெக்டேர் அல்லது அதற்கு அதிகமான நிலம் உள்ளது. இது மற்ற வேளாண் தொழில் புரியும் சமூகங்களைக் காட்டிலும் மிக மிகக் குறைவாகும். எஞ்சியவர்கள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட சிறு விவசாயிகளாக உள்ளனர்.
இதனால் பொருளாதார நிலைகளில் இவர்கள் பின்தங்கியே உள்ளனர். இது அப்பகுதியில் வாழும் ஆதிக்க ஜாதியினருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ராஜஸ்தான், பீகார், அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலைகள் மிகவும் நலிந்தே உள்ளது. இதனால் இவர்கள் அப்பகுதியில் வாழும் ஆதிக்க ஜாதியினரின் வீடுகளில் அல்லது தோட்டங் களில் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஆதிக்க ஜாதி இந்துக்களிடம் வேலை பார்ப்பதால் திருமண செலவுகள், மருத்துவ செலவுகள் போன்ற பணத் தேவைகளுக்கு அவர்களை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இது இவர்களின் மீது வன்கொடுமைகள் அதிகளவில் நிகழ்த்தப் படுவதற்கு ஒரு முக்கியக் காரணியாய் இருக்கிறது.
இதில் தாழ்த்தப்பட்ட பெண்கள் நிலைதான் இன்னும் மோசம். இந்தியாவைப் பொறுத்தவரையில் எல்லாத் தரப்பு பெண்களும் பல்வேறு வடிவங்களில் வன்முறைக்குள்ளாகப்ப டுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. அரசின் பல்வேறு புள்ளி விவரங்களும் இதை எடுத்துரைக்கின்றன. அதிலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இந்த ஆய்வில் விளக்கியுள்ளனர் தலித் மகிளா அமைப்பினர்.
தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு 4இன் படி 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட கிராமப்புற தாழ்த்தப்பட்ட பெண்கள் 33.2 விழுக்காட்டினர் உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்கள் 29.2 விழுக்காடும், பழங்குடியின பெண்கள் 26.3 விழுக்காடும், பொதுப் பிரிவு பெண்கள் 19.7 விழுக்காடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படுவதை விட கொடுமை யானது, அதற்கான நீதி மறுக்கப்படுவது. மற்ற சமூகத்துப் பெண்களைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண் களுக்குத்தான் அவர்கள் மீதான வன்முறை களுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய அடிப்படை உதவிகள் கூட முறையாகக் கிடைப்பதில்லை. மேலும் இந்தியாவில் ஜாதி, மதம், மொழி, வயது, இயலாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இன்னல்களுக்கு உள்ளாகும் பெண்கள் குறித்த முறையான, முழுமையான ஆவணங்கள் கூட தொகுக்கப்படவில்லை என்றும் இந்த ஆய்வு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து அனைத்திந்திய தலித் மகிளா அதிகார் மான்ச் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆஷா கவ்டல் ஃபிரண்ட்லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆய்வறிக்கையை நாங்கள் அய்.நா. மனித உரிமை அமைப்பில் சமர்ப்பித் திருப்பது உலக நாடுகளிடம் அனுதாபம் தேட அல்ல. எங்கள் உரிமைகளைத் தடை செய்து ஒருபக்கம் சாயும் இந்த நிலைக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்” என்று கூறியுள்ளார்.
இவையெல்லாவற்றுடன் மற்றொரு முக்கியமான வாதத்தையும் இந்த ஆய்வு அய்.நா மன்றத்தில் முன்வைத்துள்ளது. அதாவது கடந்த சில ஆண்டுகளில் புதியப் புதிய வடிவங்களில் தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. அது ஜாதியின் பெயராலோ, வகுப்பின் பெயராலோ, பாலினப் பிரிவின் பெயராலோ நிகழ்ந்திருக்க லாம். இதற்கான ஆவணங்களையும் வன் கொடுமை கண்காணிப்பு அமைப்பின் தகவல்கள் மூலம் இந்த ஆய்வில் இணைத்திருக்கிறார்கள்.
ஆனால் மேலே கூறியது போல இவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதுதான் மிகப்பெரிய கடினமாக ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் எந்த ஆதிக்க ஜாதிகளை சேர்ந்த வெறியர்கள் இவர்கள் மீது வன்கொடுமைகளை திணிக்கிறார்களோ, அந்த ஆதிக்க ஜாதிகளை சேர்ந்தவர்கள்தான், ஜாதியக் கட்டமைப்பை உள்வாங்கிக்கொண்டவர்கள்தான் காவல் துறை அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆதிக்க ஜாதியினர்கள் பொறுப்பில் அமர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஜாதி ஒற்றுமை பேசுகிறார்கள். சில சமயங்களில் வழக்குகளைத் திரும்பக் பெறக் கோரி சம்மந்தப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் பயங்கரமான மிரட்டலுக்கும் உள்ளாக்குகின்றனர். எஸ்.சி./ எஸ்.டி சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் வழங்கியுள்ளன. ஆனால் இதுவரையில் இந்த சட்ட உட்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டதே இல்லை என்று இந்த ஆய்வறிக்கை ஒரு முக்கியமான குற்றச் சாட்டையும் முன்வைக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை வைத்துக் கொண்டுதான், மோடி அரசு தனது பார்ப்பன மயமாக்கப்பட்ட நீதித் துறையின் துணையுடன் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறது. தனக்கும் அதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததைப் போல போலி நாடகத்தையும் நடத்தி வருகிறது. சமூகத்தின் விளிம்பு நிலை மக்களைக் காத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அரசு, அதற்கு நேர்மாறாக ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறது. இப்படியான அருவருக்கத்தக்க அரசியலில்தான் மோடி 4 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார்.
இது உலக நாடுகள் கண்டித்தக்க ஒன்று. ஆனாலும் கூட அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் மன்றமான அய்.நாவில் இதற்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் உலக நாடுகளின் பார்வைக்கு இதை எடுத்துச் சென்ற தலித் மகிளா அதிகார் மான்ச் அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்களின் முயற்சி கட்டாயம் பாராட்டத்தக்கது. பார்ப்பனிய இந்தியாவின் இந்துத்துவப்
பாசிச போலி முகத்தை உலக நாடுகளும் அறியட்டும்.
தகவல்கள்: ஃபிரண்ட்லைன்
கட்டுரையாளர் : பெரியாரிஸ்ட் – பத்திரிகையாளர்
நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்